Published : 25 Oct 2025 11:47 AM
Last Updated : 25 Oct 2025 11:47 AM
கோவை: கோவை பேரூர் அருகே சாலையோரம் இருந்த மரத்தில் கார் மோதி விபத்துக்குள்ளானதில், கல்லூரி மாணவர் உட்பட நால்வர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
கோவை மாவட்டம் பேரூர் அருகேயுள்ள, பேரூர் செட்டிபாளையம் பகுதியில் நேற்று நள்ளிரவு (அக்.24) ஒரு சொகுசு கார் வேகமாக வந்து கொண்டு இருந்தது. அந்தக் காரில் 5 பேர் இருந்தனர். அங்குள்ள ஒரு வளைவில் கார் திரும்ப முயன்ற போது, கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையோரம் இருந்த புளியமரத்தின் மீது மோதியது. மோதிய வேகத்தில் காரின் பெரும்பகுதி நொறுங்கியது.
காரில் இருந்தவர்களில் சிலர் சாலையில் தூக்கி வீசப்பட்டனர். சிலர் காரில் சிக்கிக் கொண்டனர். இந்த விபத்தைப் பார்த்த அவ்வழியாகச் சென்றவர்கள் உடனடியாக பேரூர் போலீஸாருக்கு தகவல் தெரிவித்து விட்டு, சம்பவ இடத்துக்கு வந்து மீட்புப் பணியில் ஈடுபட்டனர். தொடர்ந்து பேரூர் போலீஸாரும் சம்பவ இடத்துக்கு வந்து மீட்புப் பணியில் ஈடுபட்டனர்.
அதில், காரில் பயணித்த 5 பேரில், நால்வர் சடலமாக மீட்கப்பட்டனர். ஒருவர் படுகாயமடைந்த நிலையில் மீட்கப்பட்டார். போலீஸாரின் விசாரணையில், சடலமாக மீட்கப்பட்டவர்கள் தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணியைச் சேர்ந்த பிரகாஷ்(22), தஞ்சாவூர் மாவட்டம் பூக்கொல்லை பகுதியைச் சேர்ந்த ஹரிஷ்(20), புதுக்கோட்டை மாவட்டம் குமாரமங்கலத்தைச் சேர்ந்த சபரி ஐயப்பன்(21), அரியலூர் மாவட்டம் செந்துரை தாலுக்காவை சேர்ந்த அகத்தியன் (20) ஆகியோர் எனத் தெரிந்தது.
மேலும், காயமடைந்தவர் தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணியைச் சேர்ந்த பிரபாகரன் (19) எனத் தெரிந்தது. காரை பிரகாஷ் ஓட்டி வந்துள்ளார். இதில், பிரகாஷ், ஹரிஷ் மற்றும் சபரி ஐயப்பன் ஆகியோர் கோவை செல்வபுரத்தில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் ஊழியர்களாகவும், அகத்தியன் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் தோட்டக்கலைத்து றையில் 3-ம் ஆண்டு படித்து வந்ததும் தெரியவந்தது.
மேலும், காயமடைந்த பிரபாகரனும் வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 3-ம் ஆண்டு படித்து வருகிறார் என்பதும் தெரியவந்தது. இவர்கள், காரில் அதிவேகமாக வந்ததே விபத்துக்கு காரணம் எனத் தெரியவந்தது. இச்சம்பவம் தொடர்பாக போலீஸார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT