Published : 24 Oct 2025 07:10 PM
Last Updated : 24 Oct 2025 07:10 PM
சென்னை: ஆன்லைன் வர்த்தக முதலீடு என்ற பெயரில் தொழிலதிபரிடம் ரூ.1 கோடியே 43 லட்சம் பறித்த முன்னாள் வங்கி மேலாளர் உள்பட இருவர் கைது செய்யப்பட்டனர்.
சென்னை, பெருங்குடியில் வசிப்பவர் கார்த்திக் (36). பைனான்ஸ் தொழில் செய்து வரும் இவர், கடந்த மார்ச் மாதம் சமூக வலைதளத்தில் வந்த ஆன்லைன் வர்த்தக முதலீட்டு விளம்பரம் ஒன்றை பார்த்தார். அதில், முதலீட்டுக்கு இரட்டிப்பு லாபம் பெற்றுத் தருவதாக குறிப்பிடப்பட்டிருந்தது. இதை உண்மை என நம்பிய கார்த்திக், அவர்கள் குறிப்பிட்டிருந்த செல்போன் எண்ணை தொடர்பு கொண்டார். பின்னர், எதிர் தரப்பினர் அறிவுறுத்தியபடி வாட்ஸ் ஆப் குழு ஒன்றில் இணைந்தார்.
அந்தக் குழுவில் மோசடி நபர்கள் அனுப்பிய லிங் மூலமாக முதலீட்டு செயலி ஒன்றை பதிவிறக்கம் செய்து அதில் முதலீடு செய்யும் பணத்திற்கு இரட்டிப்பு லாபம் கிடைக்கும் என்று மோசடி நபர்கள் சொன்ன ஆசை வார்த்தைகளை நம்பி அவர்கள் சொன்னபடி பல்வேறு வங்கி கணக்குகளுக்கு பல்வேறு தேதிகளில் ரூ.1 கோடியே 43 லட்சம் செலுத்தினார்.
அவர் செலுத்திய பணத்துக்கு ஏற்றவாறு அதிக லாபம் வந்தது போலவும், முதலீடு செய்யப்பட்டது போலவும் மோசடி பேர்வழிகள் அந்த செயலியில் காண்பித்துள்ளனர். அதன்பின் முதலீடு செய்த பணத்தை எடுக்க முயன்றபோது அவர்கள் வெவ்வேறு காரணங்களை கூறி மேலும் பணம் கேட்டு வற்புறுத்தினர். இதனால், ஏமாற்றப்பட்டதை உணர்ந்த கார்த்திக் இது தொடர்பாக சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தார்.
இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க காவல் ஆணையர் அருண் உத்தரவிட்டார். அதன்படி, சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்தனர். இதில், ஆன்லைன் வர்த்தக முதலீட்டு மோசடியில் ஈடுபட்டது ஏற்றுமதி இறக்குமதி நிறுவனத்தின் உரிமையாளரான நுங்கம்பாக்கத்தைச் சேர்ந்த சூர்யா ஸ்ரீனிவாஸ் (50) என்பது தெரியவந்தது.
அவரை பிடித்து போலீஸார் விசாரணை மேற்கொண்டபோது, இந்த மோசடிக்கு மூளையாக செயல்பட்டது மேற்கு சைதாப்பேட்டையைச் சேர்ந்த சேஷாத்ரி எத்திராஜ் (43) என்பது தெரிந்தது. இதையடுத்து, இருவரையும் போலீஸார் கைது செய்தனர். இதில், சேஷாத்ரி எத்திராஜ், வங்கி ஒன்றில் முன்பு மேலாளராக பணி செய்து வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
சமீப காலமாக ஆன்லைன் முதலீட்டு மோசடி மற்றும் ஆன்லைன் பகுதி நேர வேலை தொடர்பாக பேஸ்புக், இன்ஸ்டாகிராம், யூடியூப் போன்ற சமூக வலைதளங்களில் போலியான விளம்பரங்கள் மூலம் குறுகிய காலத்தில் அதிக லாபம் சம்பாதிக்கும் ஆசை கட்டி பங்கு வர்த்தக செயலிகள், விங்குகள், வலைதளங்கள் அனுப்பியும், பொய்யான டிமேட் கணக்குகளை துவக்கியும் பல்வேறு வங்கி கணக்குகளில் பணத்தை பெற்று மோசடி பேர்வழிகள் பொதுமக்களை ஏமாற்றுகின்றனர்.
இதில், ஏமாந்து விடாமல் உஷாராக இருக்க வேண்டும். அதையும் மீறி ஏமாற்றப்பட்டால் பொது மக்கள் 1930-க்கு தொடர்புகொண்டு விவரங்களை தெரிவிக்க வேண்டும் அல்லது இணையவழி மூலமாக https.www.cybercrime.gov.in என்ற இணையதளத்தில் புகாரை பதிவு செய்யலாம் என காவல் ஆணையர் அருண் அறிவுறுத்தி உள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT