Published : 23 Oct 2025 06:55 AM
Last Updated : 23 Oct 2025 06:55 AM
சென்னை: சென்னை, கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள ஈஞ்சம்பாக்கத்தில் வசித்தவர் சிரஞ்சீவி தாமோதர குப்தா (56). சென்னை அண்ணா சாலையில், எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் மொத்த விற்பனை கடை வைத்திருந்தார். இவருக்கு ரேவதி (45) என்ற மனைவியும், ரித்விக் ஹர்ஷத் (15), தித்விக் ஹர்ஷத் (11) ஆகிய இரு மகன்களும் இருந்தனர்.
குப்தாவிடம் கடனுக்கு எலக்ட்ரானிக்ஸ் பொருட்களை வாங்கியவர்கள் பணத்தை கொடுக்காமல் காலம் தாழ்த்தி வந்துள்ளனர். இதனால் தொழிலில் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. கடன் கொடுத்தவர்கள் நெருக்கடி கொடுத்ததால், குப்தா வேதனையில் இருந்துள்ளார். இந்நிலையில், நேற்று சேலத்தில் உள்ள தனது மாமா முரளியின் வங்கி கணக்குக்கு ரூ.1 லட்சம் அனுப்பி வைத்துள்ளார்.
இதையடுத்து, முரளி போனில் அழைத்த போது, குப்தா அழைப்பை ஏற்கவில்லை. இதனால், சந்தேகம் அடைந்த முரளி சாலிகிராமத்தில் வசிக்கும் குப்தாவின் மனைவி ரேவதியின் தம்பி சாய்கிருஷ்ணாவிடம் தகவல் தெரிவித்து, நேரடியாக சென்று பார்க்கும்படி அறிவுறுத்தி உள்ளார். இதையடுத்து, சாய் கிருஷ்ணா ஈஞ்சம்பாக்கம் சென்று பார்த்த போது கதவு திறந்திருந்தது.
உள்ளே சஞ்சீவி கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் குளியலறையில் இறந்து கிடந்தார். மனைவி ரேவதி, மகன்கள் ரித்விக், தித்விக் ஆகிய 3 பேரும் கழுத்தில் பாலித்தீன் கவர் மூடிய நிலையில் இறந்து கிடந்தனர். இது தொடர்பாக, நீலாங்கரை போலீஸாருக்கு சாய் கிருஷ்ணா தகவல் தெரிவித்தார்.
போலீஸார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினர். கடன் தொல்லையால் தற்கொலை செய்து கொள்கிறோம் என குப்தா எழுதிய கடிதம் வீட்டிலிருந்து கண்டெடுக்கப்பட்டது. மேலும் மனைவி, 2 மகன்களை கொன்று விட்டு குப்தா தற்கொலை செய்து கொண்டதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT