Published : 22 Oct 2025 06:55 AM
Last Updated : 22 Oct 2025 06:55 AM
கும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டி அருகே பெண் கொலை செய்யப்பட்டு, பிளாஸ்டிக் பேரலில் அடைத்து, பள்ளம் தோண்டி புதைக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதுதொடர்பாக கொலை செய்யப்பட்ட பெண்ணின் கணவரை நேற்று போலீஸார் கைது செய்துள்ளனர். திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி அருகே உள்ள எளாவூரை அடுத்த துராபள்ளம் கிராமத்தைச் சேர்ந்த சிலம்பரசன் (39). பெயிண்டர். இவரது மனைவி பிரியா (26). இத்தம்பதிக்கு 6 மற்றும் 7 வயதுகளில் இரு மகன்கள் உள்ளனர்.
இந்நிலையில், மனைவி பிரியாவின் நடத்தையின் மீது சந்தேகமடைந்த சிலம்பரசன் அடிக்கடி அவரிடம் தகராறில் ஈடுபடுவதும், இதனால், கணவரிடம் கோபித்துக் கொண்டு தாய் வீட்டுக்கு பிரியா செல்வதும் வழக்கமாக இருந்து வந்துள்ளது.
இந்நிலையில், ஆரணி அருகே உள்ள புதுபாளையம் கிராமத்தைச் சேர்ந்த பிரியாவின் குடும்பத்தினர், தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, பிரியாவை சந்திக்க நேற்று முன் தினம் சிலம்பரசன் வீட்டுக்கு வந்துள்ளனர். அப்போது, சிலம்பரசன், பிரியா இரு மாதங்களுக்கு முன்பு வீட்டை விட்டு ஓடிவிட்டதாக தெரித்துள்ளார். குழந்தைகளும் இரு மாதங்களாக தாய் பிரியாவை காணவில்லை என, தெரிவித்துள்ளனர்.
இதனால், சந்தேகமடைந்த பிரியாவின் தந்தை சீனிவாசன் (55) அளித்த புகாரின் அடிப்படையில், ஆரம்பாக்கம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து, முதல் கட்ட விசாரணை நடத்தினர். சிலம்பரசன், பிரியாவின் நடத்தையின் மீது ஏற்பட்ட சந்தேகம் காரணமாக கடந்த ஆக. 14-ம் தேதி இரவு பிரியாவிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார்.
தகராறு முற்றியதால், பிரியாவின் கழுத்தை நெரித்து கொலை செய்த சிலம்பரசன், உடலை பிளாஸ்டிக் பேரலில் அடைத்து, மோட்டார் சைக்கிள் மூலம் எளாவூர் ஏழு கண் பாலம் பகுதிக்கு எடுத்து சென்று, அங்குள்ள மயானம் அருகே பள்ளம் தோண்டி பிரியாவின் உடலை புதைத்துள்ளது, விசாரணையில் தெரியவந்தது.
இதையடுத்து, கும்மிடிப்பூண்டி வட்டாட்சியர் சுரேஷ்பாபு முன்னிலையில், நேற்று எளாவூர் மயானம் அருகே புதைக்கப்பட்ட பிரியாவின் உடல் தோண்டி எடுக்கப்பட்டது. திருவள்ளூர் அரசு மருத்துவமனை மருத்துவர்கள் அருண் கவுதம், சைதன்யா பிரேத பரிசோதனை மேற்கொண்டனர். இதையடுத்து போலீஸார், சிலம்பரசனை கைது செய்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT