Published : 21 Oct 2025 01:54 PM
Last Updated : 21 Oct 2025 01:54 PM
அரியலூர்: துணிக்கடையில் மின் கசிவு காரணமாக தீப்பற்றியதில் ரூ.3 லட்சம் பணம், பல லட்சம் ரூபாய் மதிப்பிலான துணிகள் மற்றும் மின் சாதன பொருட்கள் தீயில் எரிந்து சேதமடைந்தது.
அரியலூர் நகரின் முக்கிய கடை வீதிப் பகுதியான தேரடியில் சண்முகம் என்பவர், கடந்த பல ஆண்டுகளாக சண்முகா என்ற பெயரில் ஜவுளிக் கடை நடத்தி வருகிறார். தீபாவளி விற்பனையை முடித்து நேற்று (அக்.20) இரவு 7 மணிக்கு கடையை பூட்டிவிட்டு, சண்முகம் தனது வீட்டுக்கு சென்றுள்ளார்.
இந்நிலையில் இரவு 11 மணி அளவில் ரோந்து சென்ற போலீசார் சண்முகத்துக்கு சொந்தமான துணிக்கடையில் இருந்து புகை வெளி வருவதை கண்டறிந்துள்ளனர். மேலும், சந்தேகம் அடைந்த காவலர்கள் அருகில் சென்று பார்த்த போது கடையில் தீப்பற்றியுள்ளது தெரியவந்தது.
உடனடியாக தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்த காவல்துறையினர், துணிக்கடை உரிமையாளர் சண்முகத்துக்கும் தகவலை தெரிவித்துள்ளனர். தகவலறிந்து உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்த அரியலூர் தீயணைப்பு நிலைய அலுவலர் செந்தில் குமார் தலைமையிலான வீரர்கள் உடனடியாக தீயை கட்டுப்படுத்தினர்.
மேலும், அடுத்தடுத்த கடைகளுக்கும் தீ பரவுவதை தடுக்கும் வகையில் மின்சாரத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு மின் இணைப்பும் துண்டிக்கப்பட்டது.
மொத்தம் இரண்டு தளங்கள் கொண்ட கட்டிடத்தின், தரை தளத்தில் இருந்த துணிகள் முற்றிலும் தீப்பற்றி எரிந்ததால் தீயணைப்புத் துறை வாகனத்துடன், கூடுதலாக செந்துறை தீயணைப்பு நிலையத்திலிருந்தும், தனியார் சிமென்ட் தொழிற்சாலைக்கு சொந்தமான தீயணைப்பு வாகனங்களும் விரைந்து வந்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டன. மேலும் ஜேசிபி வாகனம் வரவழைக்கப்பட்டு துணிக்கடையின் பிரதான இரும்பு கதவை உடைத்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். 2 மணி நேர போராட்டத்துக்கு பின்னர் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
தீ விபத்தில் தீபாவளி அன்று விற்பனை முடித்து கடையிலேயே வைத்திருந்த, ரூ.3 லட்சம் பணம் எரிந்து சாம்பலாகின. மேலும், தீபாவளி பண்டிகை காலம் என்பதால் மிச்சம் இருந்த புதிய ரக துணிகள், கம்ப்யூட்டர் சாதனங்கள், மின்சார சாதனங்கள், பர்னிச்சர்கள் ஆகிய பல லட்சம் மதிப்பிலான பொருட்கள் முற்றிலும் எரிந்து சாம்பலாகான்.
இதனிடையே, விபத்து குறித்து அரியலூர் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பண்டிகை காலத்தில் ஏற்பட்ட ஜவுளிக் கடை தீ விபத்தால் அரியலூர் நகரில் வியாபாரிகள் மத்தியில் சோகம் நிலவியுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT