Published : 19 Oct 2025 09:17 AM
Last Updated : 19 Oct 2025 09:17 AM
தூத்துக்குடி: சீனாவில் இருந்து தூத்துக்குடிக்கு கப்பலில் வந்த ரூ.5 கோடி மதிப்பிலான சீன பட்டாசுகள் பறிமுதல் செய்யப்பட்டன. இது தொடர்பாக மும்பை தொழிலதிபர்கள் உட்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
தீபாவளியை முன்னிட்டு தடை செய்யப்பட்ட சீன பட்டாசுகள் கடத்தப்படுகிறதா என்று மத்திய வருவாய் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள், சுங்கத் துறை அதிகாரிகள் ஆகியோர் கண்காணித்து வருகின்றனர்.
இந்நிலையில், சீனாவின் நிங்பே துறைமுகத்தில் இருந்து தூத்துக்குடிக்கு வந்த கப்பலில், தூத்துக்குடியைச் சேர்ந்த ஒரு நிறுவனத்துக்கு இரு கன்டெய்னர்கள் வந்தன. அவற்றில் இன்ஜினீயரிங் பொருட்கள் இருப்பதாக ஆவணங்களில் குறிப்பிடப்பட்டிருந்தது.
மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் அந்த இரு கன்டெய்னர்களையும் திறந்து சோதனையிட்டனர். அப்போது, தகரம், பிளாஸ்டிக் போன்ற பொருட்களை ஒட்டுவதற்குப் பயன்படும் சிலிக்கான் பசை போன்றவை இருந்தன. அவற்றுக்கு அடியில் இந்தியாவில் தடை செய்யப்பட்ட சீன பட்டாசுகள் மறைத்து வைக்கப்பட்டிருந்தன. அவற்றின் மதிப்பு ரூ.5 கோடியாகும்.
சட்டவிரோதமாக சீன பட்டாசுகள் இறக்குமதியில் ஈடுபட்ட தூத்துக்குடி திரேஸ்புரத்தை சேர்ந்த மைக்கேல் ஜேக்கப் ஜெயசேகரன், சூசை மாணிக்கம் ஜெயேந்திரன், மும்பையை சேர்ந்த தொழிலதிபர்கள் விகாஷ் பட்டேஷ்வர் தவுபி, தசரத் மச்சீந்தரா கோக்கரே ஆகிய 4 பேரும் கைது செய்யப்பட்டு, பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். மேலும், தப்பியோடிய மும்பையை சேர்ந்த தொழிலதிபர் ஒருவரை போலீஸார் தேடி வருகின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT