Published : 14 Oct 2025 10:19 AM
Last Updated : 14 Oct 2025 10:19 AM
புதுடெல்லி: கர்வா சவுத் தினத்தில் மாமனார் வீட்டைச் சேர்ந்தவர்களுக்கு உணவில் மயக்க மருந்து கலந்துகொடுத்து ரூ.30 லட்சம் மதிப்புள்ள நகைகளுடன் 12 மணமகள் ஓடிச் சென்ற விவரம் தெரியவந்துள்ளது.
கர்வா சவுத் பண்டிகை தினத்தில், பெண்கள் தங்கள் கணவர்களின் பாதுகாப்பு மற்றும் நீண்ட ஆயுளுக்காக சூரிய உதயம் முதல் சந்திர உதயம் வரை விரதம் இருப்பர். மாலை நேரத்தில் அகல் விளக்கேற்றி சல்லடை வழியாக கணவரின் முகத்தைப் பார்த்து விரதத்தை பெண்கள் முடிப்பர்.
இந்த பண்டிகை பாரம்பரியமாக நேபாள நாடு, டெல்லி, ஹரியானா, ராஜஸ்தான், பஞ்சாப், ஜம்மு, மத்தியபிரதேசம், உத்தரபிரதேசம், இமாச்சலப்பிரதேச மாநிலங்களில் கொண்டாடப்படுகிறது. இந்நிலையில் உ.பி.யின் அலிகர் நகரில் மட்டும் புதிதாக திருமணமான 12 மணப்பெண்கள் வீட்டில் இருந்த நகைகளை எடுத்துக் கொண்டு வீட்டை விட்டு மாயமானது தெரியவந்துள்ளது.
உத்தர பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் தற்போது பிஹார், ஜார்க்கண்ட் மாநிலங்களில் இருந்து பெண் எடுக்கிறார்கள். இதற்காகவே திருமணத் தரகர்கள் ஏராளமானோர் உள்ளனர். தரகர்களுக்கு ஏராளமான பணம் கொடுத்து தங்களது பெண்களை உ.பி.யில் திருமணம் செய்து வைப்பது தற்போது நடைபெற்று வருகிறது. இதன்மூலம் மணமகன் வீட்டிலிருந்து ரொக்கம், நகைகள், வெள்ளிப் பொருட்களை
திருடி மோசடி செய்வதும் நடைபெற்றது.
இதனிடையே, புனிதமான கர்வா சவுத் தினத்தில் புதிதாக திருமணமான பெண்கள் தங்களது கணவர்களை கைவிட்டு பணம், நகையுடன் மாயமானது தெரியவந்துள்ளது.
அலிகர் நகரிலுள்ள சாஸ்னி போலீஸ் நிலையத்தில் ஏராளமான பெண்கள் இதுபோன்று செய்துள்ளனர். அதாவது திருமணம் என்ற பெயரில் மணமகன் வீட்டுக்கு வந்து அங்கிருந்த பணம், நகைகளை திருடிக் கொண்டு மாயமாகும் மோசடி நடைபெற்று வருவது தெரியவந்துள்ளது.
கடந்த கர்வா சவுத் தினத்தில் 12 பெண்கள் இதுபோன்று ரூ.30 லட்சம் நகைகளுடன் மாயமாகியுள்ளனர். இதில் பல மணப்பெண்கள், தங்களது மாமனார் குடும்பத்தாருக்கு உணவில் மயக்க மருந்தைக் கலந்து கொடுத்துவிட்டு தப்பியுள்ளனர் என்று போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். சில வீடுகளில் பணம், வெள்ளிப் பொருட்களுடன் அவர்கள் மாயமாகியுள்ளனர்.
இவ்வாறு பெண்கள் மாயமான பின்னர் திருமணத் தரகர்களை தொடர்புகொள்ள முயலும்போது அவர்களது செல்போன் ஸ்விட்ச் ஆஃப் செய்யப்பட்ட நிலையில் உள்ளது. மேலும் அவர்கள் எங்கிருக்கிறார்கள் என்பதும் தெரியவில்லை.
இதுகுறித்து அலிகர் போலீஸ் உதவி போலீஸ் கண்காணிப்பாளர் மயங்க் பதக் கூறும்போது, “ஏமாற்றிய மணப்பெண்கள் குறித்து எப்ஐஆர் பதிவு செய்து விசாரணையைத் தொடங்கியுள்ளோம். இதற்காக தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. அவர்களை விரைவில் கைது செய்வோம்” என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT