Published : 13 Oct 2025 06:07 PM
Last Updated : 13 Oct 2025 06:07 PM
நாமக்கல்: கிட்னி விற்பனை விவகாரத்தில் கைதான இருவர் சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
பள்ளிபாளையம் கிட்னி விவகாரம் தொடர்பாக கைதான இரு இடைத்தரர்கள் சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம், குமாரபாளையம் உள்ளிட்ட பகுதிகளில் வறுமையில் வாடும் விசைத்தறி தொழிலாளர்களை குறிவைத்து பல ஆண்டுகளாக கிட்னி திருட்டு நடைபெற்று வந்தது. சமீபத்தில் இந்த விவகாரம் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதையடுத்து இவ்விவகாரம் தொடர்பாக தமிழ்நாடு ஹெல்த் சிஸ்டம் ப்ராஜெக்ட் இயக்குநர் டாக்டர் வினித் மற்றும் மெடிக்கல் ஆக்ட் துணை இயக்குநர் மீனாட்சி சுந்தரேசன், மெடிக்கல் ஆக்ட் டிஎஸ்பி சீதாராமன் ஆகியோர் கொண்ட சிறப்புக் குழு அமைக்கப்பட்டது. இந்த குழுவினர் கடந்த ஜூலை மாதம் பள்ளிபாளையம் சுற்றுவட்டாரத்தில் ஆய்வு மேற்கொண்டனர்.
ஆய்வின் ஒரு பகுதியாக திருச்செங்கோடு வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் கிட்னி தானம் வழங்கியவர்கள் தொடர்பான ஆவணங்களை சரிபார்த்து தகவல்களை திரட்டிச் சென்றனர். அந்த தகவலின் அடிப்படையில் இவ்விவகாரம் தொடர்பாக அமைக்கப்பட்ட சிறப்பு காவல் படையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக நேற்று முன்தினம் கோவை காவல்துறை கண்காணிப்பாளர் கார்த்திகேயன், மதுரை காவல்துறை கண்காணிப்பாளர் அரவிந்த் ஆகியோர் தலைமையிலான சிறப்பு காவல் படையினர் விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில் பள்ளிபாளையம் அன்னை சத்தயா நகரைச் சேர்ந்த ஸ்டாலின் மோகன் (48), ஆனந்தன் (45) ஆகிய இருவரும் கிட்னி விற்பனை செய்யும் இடைத்தரகர்களாக செயல்பட்டது தெரியவந்தது. இதையடுத்து இருவரையும் கைது செய்த போலீஸார் குமாரபாளையம் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி பின் சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT