Published : 11 Oct 2025 06:09 AM
Last Updated : 11 Oct 2025 06:09 AM
சென்னை: ஆளுநர் மாளிகை, ஐடி நிறுவனங்கள் உட்பட சென்னையில் ஒரே நாளில் 9 இடங்களில் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னையில் கடந்த சில நாட்களாக உயர் நீதிமன்றம், விமானநிலையம், ஆளுநர் மாளிகை, அரசியல் கட்சித் தலைவர்கள் வீடு, திரைப் பிரபலங்கள் மற்றும் முக்கிய பிரமுகர்களின் வீடுகளுக்கு தொடர்ச்சியாக மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், நேற்று ராயப்பேட்டை ஜிபி சாலையில் உள்ள தமிழக காங்கிரஸ் தலைமை அலுவலகமான சத்தியமூர்த்தி பவனுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்து மின்னஞ்சல் வந்தது.
இதையடுத்து, மோப்ப நாய் மற்றும் வெடிகுண்டு நிபுணர்கள் உதவியுடன் போலீஸார் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். சுமார் ஒரு மணி நேரம் நடந்த சோதனையில் வெடிகுண்டு ஏது சிக்காததால், இது வெறும் புரளி எனத் தெரியவந்தது. பின்னர், போலீஸார் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றனர்.
இதேபோல், ஈக்காட்டுத்தாங்கலில் உள்ள தனியார் தொலைக்காட்சி அலுவலகம், கிண்டி ஆளுநர் மாளிகை, கோடம்பாக்கத்தில் உள்ள செய்தி நிறுவனம், முன்னாள் டிஜிபி தேவாரம் வீடு, நுங்கம்பாக்கத்தில் உள்ள ஜிஎஸ்டி அலுவலகம், சூளைமேட்டில் மூத்த பத்திரிகையாளர் மணி வீடு, சோழிங்கநல்லூர் மற்றும் துரைப்பாக்கத்தில் 2 ஐடி நிறுவனங்கள் என மொத்தம் 9 இடங்களுக்கு நேற்று அடுத்தடுத்து வெடிகுண்டு மிரட்டல் விடுத்து மின்னஞ்சல்கள் வந்தன.
அனைத்து இடங்களிலும் மோப்ப நாய், வெடிகுண்டு நிபுணர்கள் உதவியுடன் போலீஸார் சோதனையில் ஈடுபட்டனர். போலீஸாரின் தீவிர சோதனயில் எந்த இடத்திலும் வெடி குண்டு ஏதும் சிக்கவில்லை. எனவே வெடிகுண்டு மிரட்டல் வெறும் புரளி எனத் தெரியவந்தது. இந்நிலையில், வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட மின்னஞ்சல் முகவரியை வைத்து, போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT