Published : 10 Oct 2025 07:45 PM
Last Updated : 10 Oct 2025 07:45 PM
கிருஷ்ணகிரி: தென்காசியில் நடந்த அதிமுக பிரமுகர் கொலையில் ஜாமீனில் வந்தவரை, கிருஷ்ணகிரியில் வெட்டிக் கொல்ல முயன்ற கூலிப்படையைச் சேர்ந்த 5 பேரை போலீஸார் கைது செய்தனர்.
கிருஷ்ணகிரி புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள ஏரிக்கரை பகுதியில் நேற்று இரவு ஒருவரை, அரிவாள், பெட்ரோல் கேனுடன் 5 பேர் கொண்ட கும்பல் துரத்திச் செல்வதாக, நகர காவல் நிலையத்துக்கு தகவல் வந்தது. தொடர்ந்து, இன்ஸ்பெக்டர் வெங்கடேஷ் பிரபு, எஸ்.ஐ-க்கள் அன்பழகன், கணேஷ் மற்றும் போலீஸார், 5 பேரையும் பிடித்து, காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து, விசாரணை நடத்தினர்.
இதுதொடர்பாக போலீஸார் கூறும்போது, “தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள மேலநீலித நல்லூரைச் சேர்ந்தவர் வேலியப்பன். அதிமுக பிரமுகர். கடந்த 2024-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் நடைபயிற்சி மேற்கொண்டபோது அவரை சிலர் வெட்டிக் கொலை செய்தனர். இந்த கொலை தொடர்பாக அதே பகுதியைச் சேர்ந்த அண்ணன் - தம்பியான பாலமுருகன், முத்துராஜ் உட்பட 4 பேரை போலீஸார் கைது செய்தனர். பின்னர், ஜாமீனில் வெளியே வந்தனர். இதில், முத்துராஜ் சென்னை போலீஸ் நிலையத்தில் கையெழுத்திட்டு, ஆலந்தூரில் டாஸ்மாக் கடை ஒன்றில் வேலை செய்து வந்தார்.
இந்நிலையில், கொலை செய்யப்பட்ட வேலியப்பனின் சகோதரர் பொன்னுபாண்டியின் மகன் கார்த்திக் (26), முத்துராஜ் உள்ளிட்டவர்களை கொலை செய்யத் திட்டமிட்டார். இதற்காக தென்காசி மாவட்டம் கற்படம் கிராமத்தைச் சேர்ந்த குருசாமி என்பவரின் மகன் கார்த்திக்ராஜ் (20), தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு சூரியமினிக்கன் பகுதியைச் சேர்ந்த கணேசன் (22), கோவில்பட்டி இந்திரா நகர் சூர்யா (20), சீனிவாசன் நகர் கார்த்திகேயன் (22) ஆகியோரை ஏற்பாடு செய்தார்.
கடந்த 2 மாதங்களாக கார்த்திக், கூலிப்படையினருடன், சென்னையில் முத்துராஜை தேடி வந்தார். இதனையறிந்த முத்துராஜ், கிருஷ்ணகிரியில் உள்ள தனது நண்பர் வீட்டில் தஞ்சமடைந்தார். இதையடுத்து இன்று, கிருஷ்ணகிரிக்கு காரில் வந்த கூலிப்படையினர், முத்துராஜை கொலை செய்ய திட்டமிட்டு ஏரிக்கரையில் துரத்திச் சென்றது தெரியவந்தது” என்றனர்.
இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீஸார், கார்த்திக், கூலிப்படையைச் சேர்ந்த கார்த்திக் ராஜ், கணேசன், சூர்யா, கார்த்திகேயன் ஆகிய 5 பேரையும் போலீஸார் கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT