Published : 10 Oct 2025 01:39 PM
Last Updated : 10 Oct 2025 01:39 PM
போடி: திருவிழாவுக்கு போடி வந்த மதுரை மாவட்டம் ஆப்பக்கரை கிராம நிர்வாக அலுவலர் ஆற்றில் நண்பர்களுடன் குளித்த போது வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டார். இவரது உடல் இன்று (அக்.10) மீட்கப்பட்டது.
மதுரை மாவட்டம் பேரையூர் அருகே உள்ள அப்பிபட்டி கிராம வருவாய் ஆய்வாளராக பணியாற்றுபவர் பால முருகன். இவர் தேனி மாவட்டம் போடி மீனாட்சிபுரம் கிராமத்தை சேர்ந்தவர். இவர் தனது கிராமக் கோயிலான செல்லாயி அம்மன் புரட்டாசி மாத திருவிழாவை முன்னிட்டு தனது ஊருக்கு பேரையூர் ஆப்பக்கரை கிராம நிர்வாக அலுவலர் மதுரை வீரன் மற்றும் பேரையூர் பகுதியைச் சேர்ந்த கிராம நிர்வாக அலுவலர்கள் சக்திவேல், சக்கரை, முத்துக் காளை ஆகியோரை அழைத்து வந்துள்ளார்.
நேற்று (அக்.9) திருவிழா முடிந்த நிலையில் பாலமுருகன் கிராம நிர்வாக அலுவலர்களை அழைத்துக் கொண்டு போடி அருகே உள்ள ஊத்தம் பாறை ஆற்றுக்கு குளிக்கச் சென்றுள்ளனர். மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக ஊத்தம்பாறை ஆற்றில் மாலை 4 மணி அளவில் திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. எதிர்பாராத இந்த காட்டாற்று வெள்ளத்தில் சிக்கிய கிராம நிர்வாக அலுவலர் மதுரை வீரன் அடித்துச் செல்லப்பட்டார்.
மற்றவர்கள் வெள்ளத்தில் இருந்து தப்பி கரையேறினர். வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட மதுரை வீரனை கண்டுபிடிக்க முடியாத நிலையில் போடி தீயணைப்புத் துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது. தீயணைப்புத் துறையினர் இரவு எட்டு மணி வரை தேடுதல் பணியில் ஈடுபட்டனர். நீண்ட நேரம் ஆகியும் அலுவலர் மதுரை வீரனை கண்டுபிடிக்க முடியவில்லை.
இதனைத் தொடர்ந்து இன்று (அக்.10) காலையில் தீயணைப்புத் துறையினர் மீண்டும் தேடுதல் பணியில் ஈடுபட்டனர். அப்போது, அலுவலர்கள் குளித்த இடத்தில் இருந்து சுமார் ஒரு கிலோ மீட்டர் தள்ளி ஓடைப் பகுதியில் முகம் சிதைந்த நிலையில் கிடந்த மதுரை வீரனின் உடலை தீயணைப்புத் துறையினர் மீட்டுள்ளனர். அவரது உடல் ஆம்புலன்ஸ் மூலம் தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு உடற்கூராய்வுக்காக கொண்டு செல்லப்பட்டது. மேலும், இச்சம்பவம் குறித்து குரங்கணி போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT