Published : 08 Oct 2025 07:51 PM
Last Updated : 08 Oct 2025 07:51 PM
சென்னை / புதுடெல்லி: சென்னையில் 6 வயது சிறுமி ஹாசினி எரித்துக் கொல்லப்பட்ட வழக்கில் குற்றவாளி தஷ்வந்துக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை ரத்து செய்தததுடன், அவரை விடுவித்தும் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.
சென்னை போரூரை அடுத்த மதநந்தபுரம் பகுதியைச் சேர்ந்த பாபு மற்றும் ஸ்ரீதேவி தம்பதியின் 6 வயது மகள் ஹாசினி. இவர் கடந்த 2017 பிப்ரவரி 5-ம் தேதி திடீரென மாயமானார். மாங்காடு போலீஸார் நடத்திய விசாரணையில், குன்றத்தூர் பகுதியைச் சேர்ந்த சேகர் மற்றும் சரளா தம்பதியின் 22 வயது மகனான தஷ்வந்த், சிறுமி ஹாசினியை பாலியல் வன்புணர்வு செய்து பின்னர் எரித்துக் கொலை செய்ததாக கைது செய்யப்பட்டு குண்டர் தடுப்புச் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்த வழக்கு விசாரணை செங்கல்பட்டு மகளிர் நீதிமன்றத்தில் நடந்து வந்த நிலையில், தஷ்வந்த் மீதான குண்டர் தடுப்புச் சட்ட உத்தரவை சென்னை உயர் நீதிமன்றம் கடந்த 2017 செப்டம்பர் 10 அன்று ரத்து செய்த நிலையில், ஜாமீனில் விடுவிக்கப்பட்ட தஷ்வந்த் கடந்த 2017 டிசம்பர் 2 அன்று அவரது தாயார் சரளாவையும் கொலை செய்து தப்பியதாக கைது செய்யப்பட்டார்.
இதனிடையே, சிறுமி ஹாசினி கொலை வழக்கை விசாரித்த செங்கல்பட்டு மாவட்ட மகளிர் நீதிமன்ற நீதிபதி வேல்முருகன், குற்றம்சாட்டப்பட்ட தஷ்வந்துக்கு தூக்கு தண்டனை விதித்து கடந்த 2018 பிப்ரவரி 19 அன்று தீர்ப்பளித்தார்.
இந்த தீர்ப்பை எதிர்த்து தஷ்வந்த் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த மேல்முறையீட்டு வழக்கை விசாரித்த நீதிபதிகள் எஸ்.விமலா, எஸ்.ராமதிலகம் ஆகியோர் அடங்கிய அமர்வு இந்த வழக்கை அரிதிலும் அரிதான வழக்கு எனக் கூறி தஷ்வந்துக்கு தூக்கு தண்டனை விதித்து செங்கல்பட்டு மகளிர் நீதிமன்றம் பிறப்பித்த தீர்ப்பை உறுதி செய்து கடந்த 2018 ஜூலை 10 அன்று உத்தரவிட்டனர்.
அதன்பின், தனக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை எதிர்த்து தஷ்வந்த் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதி விக்ரம்நாத் தலைமையிலான அமர்வு பிறப்பித்துள்ள உத்தரவின் விவரம்:
‘எரித்துக் கொல்லப்பட்ட சிறுமி ஹாசினி, குற்றம்சாட்டப்பட்ட தஷ்வந்த் ஆகிய இருவரையும் கடைசியாக பார்த்தது யார், சிசிடிவி கண்காணிப்பு கேமரா பதிவில் தஷ்வந்த் எங்கு செல்கிறார், சாட்சிகளின் ஒப்புதல் வாக்குமூலம், தடயவியல் ஆய்வறிக்கை போன்றவற்றை ஆராய்ந்ததில், குற்றச்சாட்டை அரசு தரப்பு சந்தேகத்துக்கிடமின்றி சரிவர நிரூபிக்கத் தவறியுள்ளது.
டிஎன்ஏ பரிசோதனை முடிவுகளும் பொருந்தவில்லை. போதுமான ஆதாரங்கள் சமர்ப்பிக்கப்படவில்லை. எனவே, இந்த வழக்கில் மேல்முறையீட்டு மனுதாரரான தஷ்வந்துக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை ரத்து செய்து அவரை வழக்கில் இருந்து விடுவிக்கிறோம். வேறு எந்த வழக்கிலும் அவர் தேடப்படவில்லை எனில், உடனடியாக அவரை சிறையிலிருந்து விடுவிக்க வேண்டும்’ என்று அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT