Published : 07 Oct 2025 12:17 PM
Last Updated : 07 Oct 2025 12:17 PM
கரூர்: கரூரில் முதியவர் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில், 17 வயது சிறுவன் உள்ளிட்ட 2 பேரை கரூர் நகர போலீஸார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கரூர் வஞ்சியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் சின்னதுரை இவர் மகன் சரண்ராஜ் (19). பெயிண்டர். மக்கள் பாதையை சேர்ந்தவர் ராஜேஷ். இவரது 17 வயது மகன் பேருந்து கூண்டு கட்டும் நிறுவனத்தில் பணியாற்றி வந்துள்ளார்.சரண்ராஜ், 17 வயது சிறுவன் ஆகிய இருவரும் நேற்றிரவு (அக். 6ம் தேதி) 2.30 மணியளவில மது போதையில் கரூர் லைட்ஹவுஸ் முனை அருகேயுள்ள குமரன் மாநகராட்சி உயர்நிலைப் பள்ளி வழியாக நடந்து சென்றுள்ளனர்.
அப்போது அப்பகுதியில் படுத்திருந்த 60 வயது முதியவர் அவர்களிடம் பணம் கேட்டதாக கூறப்படுகிறது. இதில் வாய்த்தகராறு ஏற்பட்டதில் சரண்ராஜ், 17 வயது சிறுவன் இருவரும் முதியவரை கீழே தள்ளி விட்டுள்ளனர். இதில அவருக்கு தலையில் காயம் ஏற்பட்டுள்ளது. மேலும் கீழே விழுந்த முதியவரை இருவரும் நெஞ்சில் மிதித்ததாகக் கூறப்படுகிறது.
மேலும் முதியவர் முகத்தில் கற்கள் குத்தி காயம் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து தகவலறிந்த கரூர் நகர போலீஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று முதியவரை மீட்டு சிகிச்சைக்கு மருத்துவமனைக்கு அனுப்புவதற்காக ஆம்புலன்ஸை வரவழைத்துள்ளனர். ஆம்புலன்ஸ் ஊழியர்கள் முதியவரை பரிசோதித்ததில் அவர் ஏற்கெனவே உயிரிழந்தது தெரியவந்தது.
இதையடுத்து வழக்கு பதிவு செய்து முதியவர் உடலை மீட்டு கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு போலீஸார் அனுப்பி வைத்தனர். மேலும் சரண்ராஜ், 17 வயது சிறுவன் ஆகிய இருவரை கைது செய்து அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகள் அடிப்படையில் சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
போலீஸ் விசாரணையில் இவர் கரூர் படிக்கட்டுத்துறை பகுதியைச் சேர்ந்த சுப்பிரமணி (60) என்பதும் கடந்த சில மாதங்களுக்கு ஹோட்டல் ஒன்றில் வேலை பார்த்ததும், வேலை பறிபோன நிலையில் கரூர் லைட்ஹவுஸ் பகுதியில போவோர், வருவோரிடம் பணம் பெற்று மது அருந்துவார் என்றும் இரவு நேரங்களில் லைட்ஹவுஸ் பகுதியில் வழக்கமாக படுத்து உறங்குவார் என்றும் கூறப்படுகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT