Published : 05 Oct 2025 11:51 AM
Last Updated : 05 Oct 2025 11:51 AM
கொளத்தூரில் கழிவு நீர் கால்வாயை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டபோது விஷவாயு தாக்கி தொழிலாளி உயிரிழந்துள்ளார்.
சென்னை கொளத்தூர் திருப்பதி நகர், 1-வது பிரதான சாலை, 3-வது குறுக்குத் தெருவில் கழிவு நீர் வடிகால்வாயை சுத்தம் செய்யும் பணி நேற்று நடைபெற்றது. இதில், சென்னை மாநகராட்சி ஒப்பந்த பணியாளர்களான கள்ளக்குறிச்சியைச் சேர்ந்த குப்பன் (30), அதே மாவட்டத்தைச் சேர்ந்த சங்கர் (40) மற்றும் வானகரத்தை சேர்ந்த ஹரி (28) ஆகியோர் ஈடுபட்டிருந்தனர். சுரேஷ் (46) குமார் என்பவர் மேற்பார்வை செய்து கொண்டிருந்தார்.
அப்போது, கழிவுநீர் கால்வாய்க்குள் இறங்கிய குப்பன் வெளியே வரவில்லை. அதிர்ச்சி அடைந்த சங்கர் மற்றும் ஹரி இருவரும் உள்ளே இறங்கி பார்த்தனர். அப்போது, அவர்களும் வெளியே வரவில்லை. இதனால், அதிர்ச்சி அடைந்த மேற்பார்வையாளர் சுரேஷ்குமார் உடனடியாக இது தொடர்பாக போலீஸாருக்கு தகவல் தெரிவித்தார்.
தகவல் அறிந்து கொளத்தூர் போலீஸார் தீயணைப்பு படை வீரர்களுடன் சம்பவ இடம் விரைந்து கழிவு நீர் வடிகால்வாய்க்குள் சிக்கிய 3 பேரையும் மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால், குப்பன் பரிதாபமாக உயிரிழந்தார். மீதம் உள்ள இருவருக்கும் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. போலீஸாரின் விசாரணையில் விஷவாயு தாக்கி குப்பன் இறந்தது தெரியவந்தது. தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT