Published : 05 Oct 2025 10:57 AM
Last Updated : 05 Oct 2025 10:57 AM
சென்னை தி.நகரைச் சேர்ந்த பிரபல தொழில் அதிபர் சுப்பிரமணி (55). இவருக்கு மடிப்பாக்கத்தில் 8 இடங்களில் சொத்துகள் உள்ளன.
இந்நிலையில், இவர் கடந்த ஆகஸ்ட் மாதம், சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் அளித்த புகார் கூறியிருப்பதாவது: எனக்குச் சொந்தமாக சென்னை கீழ்க்கட்டளை பகுதியில் ரூ.2 கோடி மதிப்புள்ள காலி வீட்டு மனை இருந்தது. நான் இறந்து விட்டதாகக் கூறி, என் பெயர் கொண்ட கும்மிடிப்பூண்டியைச் சேர்ந்த மற்றொரு நபரின் இறப்பு சான்றிதழைப் பயன்படுத்தி, எனக்கு பிரியா என்ற மகள் இருப்பதாக,, அவர் பெயரில் போலியான வாரிசு சான்றிதழ் பெற்றுள்ளனர். அந்த ஆவணங்கள் மற்றும் ஆள் மாறாட்டம் மூலம் எனது ரூ.2 கோடி சொத்தை அபகரித்து விற்பனை செய்துள்ளனர். எனவே, இதில் தொடர்புடையவர்களைக் கைது செய்து, எனது சொத்தை மீட்டுத் தர வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.
இதுகுறித்து மத்திய குற்றப்பிரிவு கூடுதல் காவல் ஆணையர் ராதிகா, துணை ஆணையர் கீதாஞ்சலி, உதவி ஆணையர் காயத்ரி மேற்பார்வையில், ஆய்வாளர் கோகுலகிருஷ்ணன் வழக்குப்பதிந்து விசாரித்தார். இதில், சுப்பிரமணி அளித்த புகார் உண்மை என தெரியவந்தது.
இதையடுத்து இவ்வழக்கில் இடைத்தரகர்களாக இருந்து போலி ஆவணங்களைத் தயார் செய்து கொடுத்த ஜமீன் பல்லாவரத்தைச் சேர்ந்த பால சுந்தர ஆறுமுகம் (40), வாணுவம்பேட்டையைச் சேர்ந்த சாலமன் ராஜ் (38) மற்றும் கே.கே நகரைச் சேர்ந்த பிரியா (32) ஆகிய மூவரையும் போலீஸார் கைது செய்தனர். மோசடிக்கு மூளையாகச் செயல்பட்டு தலைமறைவாக உள்ள மேலும் சிலரை தனிப்படை அமைத்து போலீஸார் தேடி வருகின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT