Published : 02 Oct 2025 06:27 PM
Last Updated : 02 Oct 2025 06:27 PM
திருவண்ணாமலை: திருவண்ணாமலையில் ஆந்திர மாநில இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கிய இரண்டு போலீஸார் பணியில் இருந்து நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
ஆந்திர மாநிலத்தில் இருந்து வாழைத்தார் ஏற்றிய சரக்கு வாகனம் கடந்த மாதம் 29-ம் தேதி திருவண்ணாமலைக்கு வந்துள்ளது. அந்த வாகனத்தின் ஓட்டுநரின் உறவினர்களான தாயும், மகளும் அவருடன் அண்ணாலையார் கோயிலுக்கு செல்வதற்காக உடன் வந்துள்ளனர். ஏந்தல் புறவழிச்சாலை அருகே நள்ளிரவு 2 மணியளவில் வந்தபோது ரோந்து போலீஸார் அந்த வாகனத்தை நிறுத்தி விசாரித்துள்ளனர். மேலும், பெண்கள் இருவரையும் விசாரணைக்காக போலீஸார் அழைத்துச் சென்றுள்ளனர்.
அப்போது, ஏந்தல் அருகே ஆள் நடமாட்டம் இல்லாத இடத்தில் தாய் கண்முன்னே சுமார் 25 வயதுள்ள இளம் பெண்ணை போலீஸார் இருவரும் பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். பின்னர், அவர்களை புறவழிச்சாலை அருகே விட்டுவிட்டு சென்றுள்ளனர். அதிகாலை 4 மணியளவில் அழுதுகொண்டிருந்த இரண்டு பெண்களையும் அந்த வழியாகச் சென்ற பொதுமக்கள் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் திருவண்ணாமலை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு பாதிக்கப்பட்ட இளம்பெண்ணிடம் எஸ்பி சுதாகர் விசாரணை நடத்தினார். அதில், ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கியது திருவண்ணாமலை கிழக்கு காவல் நிலைய இரண்டாம் நிலை காவலர் சுரேஷ்ராஜ் மற்றும் முதல் நிலை காவலர் சுந்தர் என்று தெரியவந்தது. அவர்கள் மீது 68 (b), 70 (i), 87, 115 (2) பிஎன்எஸ் பிரிவுகளின் கீழ் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டனர்.
இந்த விவகாரம் தெடர்பாக வடக்கு மண்டல ஐஜி அஸ்ரா கர்க் நேரில் விசாரணை நடத்தினார். தொடர்ந்து, இருவரையும் சஸ்பெண்ட் செய்து எஸ்பி சுதாகர் உத்தரவிட்ட நிலையில் போலீஸார் சுரேஷ்ராஜ் மற்றும் சுந்தர் ஆகியோரை பணியில் இருந்து நிரந்தரமாக நீக்கி (டிஸ்மிஸ்) எஸ்பி சுதாகர் உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பாக திருவண்ணாமலை மாவட்ட காவல் துறையில் இருந்து செய்திக் குறிப்பையும் வெளியிட்டுள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT