Published : 28 Sep 2025 01:03 AM
Last Updated : 28 Sep 2025 01:03 AM

சென்னையில் ஓய்வு பெற்ற வணிக வரித்துறை அதிகாரி மீது தாக்குதல்: வீட்டு உரிமையாளர், வழக்கறிஞர் கைது

ஓய்வு பெற்ற வணிகவரித்துறை அதிகாரி மீது தாக்குதல் நடத்தப்பட்ட விவகாரத்தில் வீட்டு உரிமையாளர், வழக்கறிஞரான அவரது நண்பருடன் கைது செய்யப்பட்டார்.

கோயம்பேட்டில் ஓய்வு பெற்ற வணிகவரித்துறை அதிகாரி சண்முகம் (75) குடும்பத்துடன் வசிக்கிறார். தற்போது ஆன்மீக சொற்பொழிவாற்றி வருகிறார். இவர், சரவணகுமார் என்பவரது வீட்டில், கடந்த மார்ச் மாதம் முதல் ரூ.16 ஆயிரம் வாடகைக்கு, ஓராண்டிற்கு ஒப்பந்தம் போட்டு குடியிருக்கிறார்.

இந்நிலையில், சில மாதங்களுக்கு முன் சரவணகுமார் வீட்டை காலி செய்யும்படி சண்முகத்திடம் கூறியுள்ளார். இதையடுத்து, இம்மாதம் 30-ம் தேதி வீட்டை காலி செய்வதாக சண்முகம் ஒப்புக் கொண்டுள்ளார். ஆனால், அவர் வீட்டை காலி செய்யாமல் காலம் தாழ்த்தி விடுவரோ என நினைத்து சரவணகுமார், தனக்கு தெரிந்த நண்பரான வழக்கறிஞர் ஒருவரிடம் இது தொடர்பாக தெரிவித்துள்ளார்.

இதையடுத்து, கடந்த 23-ம் தேதி சம்பந்தப்பட்ட வழக்கறிஞர் உள்பட 5 வழக்கறிஞர்கள் மற்றும் 5 திருநங்கைகளுடன் சண்முகம் வசிக்கும் வீட்டுக்கு சென்று ரகளை செய்துள்ளனர். மேலும், சண்முகத்தினரின் குடும்பதினரை தாக்கி உள்ளனர். அதுமட்டும் அல்லாமல் வீட்டில் இருந்த கணினி, பூஜை அறையில் இருந்த சிலைகள், வீட்டு உபயோக பொருட்களையும் சூளையாடி உள்ளனர்.

மேலும், வீட்டை உடனே காலி செய்யவில்லை என்றால் கொலை செய்து விடுவதாக மிரட்டி சென்றுள்ளனர். இந்த விவகாரம் குறித்து கோயம்பேடு காவல் நிலையத்தில் புகார் தெரிவிக்கப்பட்டது. அதன்படி, போலீஸார் வழக்குப் பதிந்து வீட்டு உரிமையாளர் சரவணகுமாரை கைது செய்தனர். மேலும் தகராறு செய்து தலைமறைவாக உள்ள வழக்கறிஞர்கள் மற்றும் திருநங்கைகளை போலீஸார் தேடி வந்தனர். இதுஒருபுறமிருக்கும் புகாருக்குள்ளான வழக்கறிஞர் கைது செய்யப்பட்டார். அவர் மீது 10-க்கும் மேற்பட்ட குற்ற வழக்குகள் உள்ளது என போலீஸார் தெரிவித்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x