Published : 26 Sep 2025 02:03 PM
Last Updated : 26 Sep 2025 02:03 PM
கும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டி அருகே எளாவூர் போக்குவரத்து சோதனைச்சாவடியில் லஞ்ச ஒழிப்பு துறையினர் இன்று அதிகாலை அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். இச்சோதனையில் ரூ.3.54 லட்சம் கணக்கில் வராத பணம் பறிமுதல் செய்யப்பட்டன.
திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி அருகே உள்ள தமிழக - ஆந்திர எல்லையான எளாவூர் பகுதியில் ஒருங்கிணைந்த சோதனைச் சாவடி செயல்பட்டு வருகிறது. இந்த சோதனைச் சாவடி வளாகத்தில் உள்ள போக்குவரத்து சோதனைச் சாவடியில் வாகனங்களுக்கு உரிமம் வழங்குவது உள்ளிட்டவை தொடர்பாக லஞ்சம் பெறப்படுவதாக லாரி உரிமையாளர்கள் தரப்பில் லஞ்ச ஒழிப்புத்துறையினருக்கு புகார் சென்றதாக கூறப்படுகிறது.
இதையடுத்து, திருவள்ளூர் மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை டிஎஸ்பி கணேசன் தலைமையில் 10 பேர் கொண்ட லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸார், இன்று அதிகாலை 3 மணியளவில் எளாவூர் போக்குவரத்து சோதனைச் சாவடியில் திடீர் சோதனை மேற்கொண்டனர். இதில், தமிழகத்தில் இருந்து ஆந்திரா நோக்கி செல்லக்கூடிய வாகனங்கள், ஆந்திராவில் இருந்து தமிழகத்துக்கு வரும் வாகனங்கள் உரிமத்துக்காக சமர்ப்பித்த விண்ணப்பங்கள், அதற்கு அளிக்கப்பட்ட உரிமங்களின் விவரங்கள், அதற்கான கட்டண தொகை உள்ளிட்டவை குறித்து லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை செய்தனர்.
அச்சோதனையில், சோதனை சாவடி பண கவுண்டரில் கணக்கில் வராமல் ரூ. 3. 54 லட்சம் இருந்தது தெரிய வந்தது. ஆகவே, அப்பணத்தை பறிமுதல் செய்த லஞ்ச ஒழிப்புத்துறையினர், போக்குவரத்து சோதனைச்சாவடி ஊழியர்களிடம் தீவிர விசாரணை நடத்தினர். கணக்கில் வராத பணம் வைத்திருந்த போக்குவரத்துத்துறை ஊழியர்கள் மீது துறைரீதியான ஒழுங்கு நடவடிக்கைக்கு பரிந்துரை செய்யப்படும் என, லஞ்சஒழிப்புத்துறையினர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT