Published : 21 Sep 2025 02:38 PM
Last Updated : 21 Sep 2025 02:38 PM
கணவனை இழந்த பெண்களை குறிவைத்து திருமண ஆசை காட்டி 8 பெண்களிடம் கைவரிசை காட்டிய எம்பிஏ பட்டதாரி கைது செய்யப்பட்டுள்ளார்.
சென்னை கே.கே.நகரைச் சேர்ந்த 39 வயதுடைய பெண் ஒருவர், சேத்துப்பட்டில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் அதிகாரியாகப் பணியாற்றுகிறார். இவருக்கு திருமணமாகி 2 மகன்கள் உள்ளனர். இந்நிலையில், 2013-ம் ஆண்டு அவரது கணவர் சாலை விபத்தில் இறந்து விட்டார். அவர், மறுமணம் செய்வதற்கு ஆன்லைன் திருமண செயலியில் பதிவு செய்தார்.
அப்போது, அவருக்கு அதே செயலியில் பதிவு செய்து வைத்திருந்த நுங்கம்பாக்கத்தைச் சேர்ந்த சுரேஷ்குமார் (40) என்பவர், அந்த பெண்ணை போனில் தொடர்பு கொண்டு, ‘‘நான் சென்னையில் உள்ள பிரபலமான நிறுவனம் ஒன்றில் அதிகாரியாக உள்ளேன். நாம் திருமணம் செய்து கொள்ளலாம்’’ என கூறியுள்ளார்.
அதைத் தொடர்ந்து அந்தப் பெண், கடந்த ஒரு மாதமாக சுரேஷ்குமாருடன் நெருக்கமாக பேசி வந்துள்ளனர். இந்நிலையில், கடந்த 17-ம் தேதி இரவு வள்ளுவர் கோட்டம், பேருந்து நிறுத்தம் அருகே இருவரும் காரில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தனர். அப்போது, அப்பெண்ணின் கழுத்தில் அணிந்திருந்த 9 பவுன் தங்க செயினை நைசாக திருடிச் சென்றுள்ளார். அதிர்ச்சி அடைந்த அப்பெண், இது தொடர்பாக தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீஸார் வழக்குப்பதிந்து சுரேஷ்குமாரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
முன்னதாக அவரிடம் போலீஸார் நடத்திய விசாரணையில், அவர் அரும்பாக்கத்தில் உள்ள தனியார் கல்லூரியில் படித்துவிட்டு, கிண்டியில் உள்ள பல்கலைக்கழகத்தில் எம்பிஏ படித்துள்ளார். மருந்து விற்பனை பிரதிநிதியாகவும், தனியார் வங்கி ஒன்றில் கலெக்சன் ஏஜெண்டாகவும் வேலை செய்துள்ளார். ஆடம்பர வாழ்க்கைக்கு அந்த சம்பளம் போதுமானதாக இல்லை. இந்நிலையில் 2019-ம் ஆண்டு மேடவாக்கத்தில் அவருக்கு திருமணம் நடைபெற்றுள்ளது.
பின்னர் அந்தப் பெண்ணை பிரிந்த சுரேஷ்குமார், 2021-ல் பூந்தமல்லியில் வேறொரு பெண்ணை திருமணம் செய்துள்ளார். நகை, பணம் கேட்டு அடிக்கடி பிரச்சினை செய்து அவரையும் பிரிந்துள்ளார். அதன் பிறகுதான் கே.கே.நகரைச் சேர்ந்த தற்போது புகார் அளித்த பெண்ணிடம் திருமண ஆசைகாட்டி, நகையைப் பறித்துள்ளார்.
தனது விதவிதமான புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டு பெண்களுக்கு வலை விரித்துள்ளார். குறிப்பாக கணவனை இழந்தவர்கள், கணவனால் கைவிடப்பட்ட பெண்களைக் குறி வைத்து அவர்களிடம் திருமண ஆசை காட்டி, நெருக்கமாக இருந்ததோடு நகை, பணத்தையும் பறித்து செல்வதை வழக்கமாக வைத்துள்ளார். இவர் இதேபோல் 8 பெண்களிடம் கைவரிசை காட்டி உள்ளதாகக் கூறப்படுகிறது. இவர் மீது நுங்கம்பாக்கம் காவல் நிலையத்தில் 4 வழக்கு உள்பட மொத்தம் 5 வழக்குகள் உள்ளது தெரியவந்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT