Published : 19 Sep 2025 05:15 PM
Last Updated : 19 Sep 2025 05:15 PM
சென்னை: 100 பவுன் ஏற்கெனவே பெற்ற நிலையில் கூடுதலாக 100 பவுன் கேட்டு கொடுமை படுத்திய குற்றச்சாட்டில், மனைவியின் வரதட்சணை புகாரில் மின்வாரிய இளநிலை பொறியாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சென்னை சூளைமேட்டைச் சேர்ந்தவர் டிம்பின் சங்கீதா (26). இவருக்கும் தமிழ்நாடு மின்வாரியத்தில் இளநிலை பொறியாளராக பணி செய்து வந்த ஹாரிஸ் (31) என்பவருக்கும் கடந்த பிப்ரவரி 2-ம் தேதி திருமணம் நடைபெற்றது. இதையடுத்து, அதே பகுதியில் உள்ள ஒரு வீட்டில் இருவரும் தனிக்குடித்தனம் நடத்தினர்.
முன்னதாக சங்கீதா பெற்றோர் மகளின் திருமணத்துக்கு 100 பவுன் தங்க நகைகள் வழங்கி இருந்தனர். ஆனால் கணவரும், அவரது தாயாரும் சேர்ந்து மேலும் 100 பவுன் தங்க நகைகள் என மொத்தம் 200 சவரன் தங்க நகைகள், 2 கிலோ வெள்ளி பொருட்கள், சங்கீதாவின் பெற்றோருக்கு சொந்தமான நிலத்தை ஹாரீஸ் பெயருக்கு கிரையம் செய்து கொடுக்க வேண்டும் என கொடுமைப்படுத்த ஆரம்பித்ததாக கூறப்படுகிறது.
அப்படி கொடுத்தால்தான் உன்னோடு வாழ்வேன் என கணவர் ஹாரிஸ் மிரட்டி உள்ளார். தாக்கவும் செய்தாராம். மேலும், சூளைமேடு வீட்டை தன்னிச்சையாக காலி செய்து விட்டு நொளம்பூருக்கு இடம் பெயர்ந்துள்ளார். இதனால், தவித்த சங்கீதா சேர்ந்து வாழும்படி கணவரிடம் கெஞ்சி உள்ளார். ஆனால், மனம் இறங்காத ஹாரிஸ் வரதட்சணை கொடுத்தால் மட்டுமே சேர்ந்து வாழ முடியும் என கறாராக தெரிவித்தாராம்.
இதனால், விரக்தி அடைந்த சங்கீதா அவரது பெற்றோர் வீட்டுக்கு சென்று நடந்த சம்பவங்களை விவரித்துள்ளார். இதனால், வேதனை அடைந்த பெற்றோர், மக்களுக்கு நிகழ்ந்த வரதட்சணை கொடுமை தொடர்பாக அண்ணாநகர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தனர்.
அதன்படி, போலீஸார் விசாரணை மேற்கொண்டனர். மேலும், சென்னை மாவட்ட வரதட்சணை தடுப்பு அதிகாரிகளும் தனியாக விசாரித்து அது தொடர்பான அறிக்கையை காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். அதை அடிப்படையாக வைத்து அண்ணா நகர் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீஸார் வரதட்சணை தடுப்பு பிரிவு உள்பட மேலும் சில பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிந்து ஹாரிஸை கைது செய்தனர். பின்னர், அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT