Published : 19 Sep 2025 06:55 AM
Last Updated : 19 Sep 2025 06:55 AM
மயிலாடுதுறை: செல்போன் செயலி மூலம் கல்லூரி மாணவியின் நடவடிக்கைகளை ரகசியமாக கண்காணித்தவர் கைது செய்யப்பட்டார். மயிலாடுதுறை பழைய பேருந்து நிலையம் அருகேயுள்ள இன்டர்நெட் மையத்தில் பணியாற்றி வருபவர் பெரம்பூர் அகரவல்லம் பகுதியைச் சேர்ந்த முகமது அப்ரித்(28). அண்மையில், இந்த மையத்துக்கு பாஸ்போர்ட் விண்ணப்பிப்பதற்காக வந்த கல்லூரி மாணவி ஒருவரின் செல்போனில், அவருக்கே தெரியாமல் ஒரு செயலியை பதிவிறக்கம் செய்து கொடுத்துவிட்டார்.
தனது செல்போனில் சந்தேகத்துக்கிடமான வகையில் நோட்டிபிகேஷன் வருவது, விரைவாக சார்ஜ் குறைவது உள்ளிட்ட காரணங்களால் சந்தேகமடைந்த அந்த மாணவி, இதுகுறித்து தனது குடும்பத்தினரிடம் தெரிவித்துள்ளார். இதையடுத்து, மயிலாடுதுறை காவல் நிலையத்தில் மாணவியின் தாயார் அளித்த புகாரின்பேரில், காவல் உதவி ஆய்வாளர் அருண்குமார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினார்.
விசாரணையில், ஒரு செல்போனில் இருந்து மற்றொரு செல்போனை கண்காணிக்கக் கூடிய செயலி அந்த மாணவியின் செல்போனில் பதிவிறக்கம் செய்யப்பட்டு இருப்பதும், அதன் மூலம் அந்த மாணவியின் செல்போன் கேமரா மூலம் அவரது செயல்பாடுகளை அவருக்கே தெரியாமல் ரகசியமாக கண்காணித்து வந்ததும், அந்த செயலியை இன்டர்நெட் மைய ஊழியர் முகமது அப்ரித் பதிவிறக்கம் செய்ததும் தெரியவந்தது.
மேலும், முகமது அப்ரித் இதேபோல மேலும் 3 இளம்பெண்களின் நடவடிக்கைகளையும் செல்போன் செயலி மூலம் சட்டவிரோதமாக கண்காணித்து வந்துள்ளதும் தெரியவந்தது. இதையடுத்து, அவரை போலீஸார் நேற்று முன்தினம் கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
பொதுமக்கள் தங்கள் செல்போனில் தேவையற்ற மற்றும் நம்பகத்தன்மை இல்லாத செயலிகளை பதிவிறக்கம் செய்வதால், அவர்களின் தனிப்பட்ட தரவுகள் தவறாகப் பயன்படுத்தப்பட வாய்ப்புள்ளது. எனவே, செல்போனில் புதிய செயலிகளை பதிவிறக்கம் செய்யும்போதும், பிரவுசிங் செய்யும்போதும், அறிமுகம் இல்லாத நபர்களிடம் செல்போனை கொடுக்க நேரிடும் சூழல்களிலும் பொதுமக்கள் கவனமாகவும், எச்சரிக்கையுடனும் செயல்பட வேண்டும் என எஸ்.பி. ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார். மேலும், சைபர் குற்றங்கள் தொடர்பான உதவிகளுக்கு 1930 என்ற அவசர உதவி எண்ணை எந்த நேரத்திலும் பொதுமக்கள் அழைக்கலாம் எனவும் காவல் துறை தெரிவித்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT