Last Updated : 18 Sep, 2025 05:07 PM

 

Published : 18 Sep 2025 05:07 PM
Last Updated : 18 Sep 2025 05:07 PM

கிருஷ்ணகிரி கிராம பகுதியில் இருசக்கர வாகனங்களில் 24 மணி நேரமும் மது விற்பனை!

குருபரப்பள்ளி அருகே சென்னசந்திரம் கிராமத்தில் சட்டவிரோதமாக இருசக்கர வாகனத்தில் நடைபெறும் மது விற்பனை. (அடுத்த படம்) மது விற்பனைக்கு ஸ்கேனர் மூலம் பணம் பெறப்படுகிறது.

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி அருகே கிராமப் பகுதியில் சட்டவிரோதமாக இருசக்கர வாகனங்களில் 24 மணி நேரம் மது விற்பனை செய்வதைத் தடுக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கிருஷ்ணகிரி அருகே குருபரப்பள்ளி உள்வட்டத்துக்கு உட்பட்ட குப்பச்சிபாறை, சென்னசந்திரம் கிராமங்களில் வசிக்கும் மக்கள் பெரும்பாலும் விவசாயத்தை வாழ்வாதாரமாகக் கொண்டுள்ளனர்.

இக்கிராமங்களில் சிலர் இருசக்கர வாகனங்களில் மது விற்பனை செய்து வருவதாகவும், எந்த நேரத்திலும் மது கிடைக்கும் என்பதால் பலர் குடித்துவிட்டு வேலைக்குச் செல்லாமல் முடங்கி வருவதாகவும், இளைஞர்கள் மதுவுக்கு அடிமையாகி வருவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இதுதொடர்பாக அப்பகுதி மக்கள் கூறியதாவது: குப்பச்சிபாறை, சென்னசந்திரம் கிராமத்தில் டாஸ்மாக் மதுக்கடை இல்லை. இப்பகுதியில் உள்ள கிராமங்களில் வசிப்பவர்கள் மது வாங்க 6 கி.மீ. தூரத்தில் உள்ள குருபரப்பள்ளி, சின்னகொத்தூர், நாச்சிக்குப்பம் பகுதிகளுக்குச் செல்ல வேண்டும்.

இந்நிலையில், அண்மைக் காலமாக குப்பச்சிபாறை முதல் ஆவல்நத்தம் கூட்டுரோடு வரை சாலையோரங்களில் இருசக்கர வாகனத்தில் சிலர் மது மற்றும் பிளாஸ்டிக் டம்ளர்கள், தண்ணீர் பாட்டில்கள், ஸ்னாக்ஸ் உள்ளிட்டவற்றை 24 மணி நேரமும் சட்டவிரோதமாக விற்பனை செய்து வருகின்றனர். மேலும், இவற்றின் விலையும் அதிகம் உள்ளது. ஆனால், எந்த நேரத்திலும் கிடைப்பதால், மது வாங்க வருவோரின் கூட்டம் குறைவில்லாமல் உள்ளது. மது விற்பனைக்கான தொகையை டிஜிட்டல் முறையில் ஜிபே, போன்-பே மூலமும் பெறப்படுகிறது.

இவ்வாறு மது வாங்கி குடிப்பவர்கள் சாலைகளில் நின்று தகராறு செய்வதும், மோசமான வார்த்தைகளைப் பேசியும் வருகின்றனர். இதனால், மாணவ, மாணவிகள், பெண்கள் உள்ளிட்ட அனைத்துத் தரப்பினரும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதில் இளைஞர்கள் சிலர் மது அருந்திவிட்டு அதிவேகமாக வாகனங்களை இயக்குவதால், விபத்துகளில் சிக்கி காயங்கள், உயிரிழப்புகளும் ஏற்படுகின்றன.

இதுதொடர்பாக குருபரப்பள்ளி காவல் நிலையம், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம், மதுவிலக்கு அமலாக்கப் பிரிவில் புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை.

சில நேரங்களில் போலீஸார் சோதனைக்கு வருவதை முன்கூட்டியே அறிந்து கொண்டு மது விற்பவர்கள் இருசக்கர வாகனத்தில் அங்கிருந்து சென்று விடுகின்றனர். இதனால், போலீஸாரால் இக்குற்றத்தில் ஈடுபடுவோரைப் பிடிக்க முடியாத நிலையுள்ளது. இதைத் தடுக்க இக்கிராமங் களில் போலீஸார் தொடர்ந்து பகல் மற்றும் இரவு நேரங்களில் ரோந்து சுற்றி கண்காணித்து சட்டவிரோத மது விற்பனையைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x