Published : 18 Sep 2025 06:58 AM
Last Updated : 18 Sep 2025 06:58 AM
சென்னை: தெலங்கானா மாநில பெண்ணுக்குச் சொந்தமான ரூ.3 கோடி மதிப்புள்ள நிலத்தை ஆள்மாறாட்டம் மூலம் அபகரித்ததாக 5 பேர் கும்பலை மத்திய குற்றப்பிரிவு போலீஸார் கைது செய்துள்ளனர். தெலங்கானா மாநிலம், ஐதராபாத்தில் உள்ள ஹரிதவனம் பகுதியில் வசித்து வருபவர் விஜயசாமுண்டீஸ்வரி (59).
இவருக்கு சொந்தமான ரூ.3 கோடி மதிப்புள்ள காலிமனை வேளச்சேரி விஜயா நகரில் இருந்தது. இதை சிலர் போலி ஆவணம் மற்றும் ஆள்மாறாட்டம் மூலம் அபகரித்துவிட்டனர். இதுகுறித்து விஜயசாமுண்டீஸ்வரி சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் கடந்த ஜூன் 2-ம் தேதி புகார் தெரிவித்தார்.
இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க மத்திய குற்றப்பிரிவு போலீஸாருக்கு காவல் ஆணையர் அருண் உத்தரவிட்டார். அதன்படி, அப்பிரிவில் உள்ள நில மோசடி புலனாய்வுப் பிரிவு போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்தனர்.
இதில் முகப்பேர் மேற்கு செந்தமிழ் நகரைச் சேர்ந்த யசோதா (59), அதே பகுதி பள்ளிக்கூட தெருவைச் சேர்ந்த பழனி (43), அயப்பாக்கம், பவானி நகரைச் சேர்ந்த வனிதா (40), முகப்பேர் மேற்கு விஜிபி நகரைச் சேர்ந்த மேகநாதன் என்ற குட்டி (49) ஆகிய 4 பேரும் சேர்ந்து விஜய சாமுண்டீஸ்வரிக்கு சொந்தமான காலி மனையை ஆள் மாறாட்டம் மற்றும் போலி ஆவணங்கள் மூலம் அபகரித்தது தெரியவந்தது.
இதையடுத்து, இவர்கள் 4 பேரையும் போலீஸார் கைது செய்தனர். மேலும் மோசடி செய்து அபகரித்த சொத்தை விற்க உதவியாக இருந்ததாக அயப்பாக்கத்தைச் சேர்ந்த அருணாச்சலம் (42) என்பவரும் கைது செய்யப்பட்டார். கைது செய்யப்பட்ட 5 பேரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். கைதான மேகநாதன் நொளம்பூர் காவல் நிலைய ரவுடிகள் பட்டியலில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT