Last Updated : 17 Sep, 2025 08:13 PM

 

Published : 17 Sep 2025 08:13 PM
Last Updated : 17 Sep 2025 08:13 PM

திருப்புவனத்தில் விதிகள் மீறி கட்டப்பட்ட அதிமுக நிர்வாகியின் திருமண மண்டபத்துக்கு ‘சீல்’

திருப்புவனம் புஷ்பவனேசுவரர் கோயில் அருகே அதிமுக ஒன்றியச் செயலாளருக்கு சொந்தமான மண்டபத்துக்கு ‘சீல்’ வைத்த பேரூராட்சி அதிகாரிகள்.

திருப்புவனம்: திருப்புவனத்தில் விதிகள் மீறி கட்டப்பட்ட அதிமுக ஒன்றியச் செயலாளர் திருமண மண்டபத்துக்கு பேரூராட்சி அதிகாரிகள் ‘சீல்’ வைத்துள்ளனர்.

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் புஷ்பவனேசுவரர் கோயில் அருகே அதிமுக கிழக்கு ஒன்றியச் செயலாளர் புவனேந்திரன் என்பவருக்கு சொந்தமான திருமண மண்டபம் உள்ளது. இந்நிலையில், கொத்தங்குளம் பகுதியைச் சேர்ந்த செந்தில்குமார் என்பவர், ‘பேரூராட்சியில் கிடங்கு கட்ட அனுமதி பெற்றுவிட்டு, விதிகள் மீறி திருமணம் மண்டபம் கட்டியதாக’ உயர் நீதிமன்றம் மதுரை அமர்வில் மனுத் தாக்கல் செய்தார்.

இந்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம், மண்டப உரிமையாளருக்கு பேரூராட்சி செயல் அலுவலர் நோட்டீஸ் அனுப்ப வேண்டும். விதிமீறல் உறுதி செய்யப்பட்டதால் 12 வாரங்களில் மண்டபத்தை இடித்து அப்புறப்படுத்த வேண்டும் என உத்தரவிட்டது. இதனை எதிர்த்து புவனேந்திரன் தரப்பினர் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். இதை விசாரித்த உச்ச நீதிமன்றம், திருமண மண்டபத்துக்கு ‘சீல்’ வைக்க பேரூராட்சி அதிகாரிகளுக்கு இடைக்கால தீர்ப்பளித்தது.

இதனையடுத்து இன்று பேரூராட்சி செயல் அலுவலர் பாலசுப்பிரமணியன் தலைமையிலான அதிகாரிகள் அதிமுக ஒன்றியச் செயலாளர் புவேனந்திரனின் மண்டபத்துக்கு ‘சீல்’ வைத்தனர். மேலும், ஏற்கெனவே உயர் நீதிமன்றம் அளித்த உத்தரவுபடி, திருப்புவனத்தில் விதிமுறைபடி இயங்காத மற்ற திருமண மண்டபங்களுக்கும் பேரூராட்சி அதிகாரிகள் நோட்டீஸ் கொடுத்துள்ளனர்.

இதுகுறித்து பேரூராட்சி அதிகாரிகள் கூறுகையில், ”விதிமீறி கட்டப்பட்டதால், உச்சநீதிமன்றம் இடைக்கால உத்தரவுபடி மண்டபத்துக்கு ‘சீல்’ வைத்தோம். மேலும் விதிமுறைபடி இயங்காத மற்ற மண்டபங்களுக்கும் நோட்டீஸ் அனுப்பியுள்ளோம். விளக்கத்தை பெற்று, அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்கப்படும்” என்று அதிகாரிகள் கூறினர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x