Published : 17 Sep 2025 06:24 AM
Last Updated : 17 Sep 2025 06:24 AM
செங்கல்பட்டு: செங்கல்பட்டு அருகே அன்புமணியின் ஆதரவாளரும் காட்டாங்கொளத்தூர் ஒன்றிய பாமக முன்னாள் தலைவர் கல்லால் அடித்து கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பாக ஒருவரை பொதுமக்கள் போலீஸாரிடம் ஒப்படைத்தனர்.
செங்கல்பட்டைஅடுத்த பட்டரவாக்கம், இளந்தோப்பு பகுதியை சேர்ந்தவர் வாசு (47). பாமகவில் மாவட்ட துணை செயலராக உள்ளார். அன்புமணி அணியை சேர்ந்த இவர் முன்னாள் கட்டாங்கொளத்தூர் ஒன்றிய சேர்மேனாகவும் இருந்துள்ளார். தற்போது மகேந்திரா சிட்டி பகுதியில் உள்ள தொழிற்சாலைகளுக்கு கேட்டரிங் கான்டிராக்ட் மற்றும் டேங்கர் லாரிகளில் தண்ணீர் சப்ளை செய்து வந்தார்.
இந்நிலையில், நேற்று மதியம் வாசு இளந்தோப்பு பகுதியில் தொழிற்சாலைகளுக்கு தண்ணீர் எடுக்கும் கிணறு அருகில் அமர்ந்திருந்தார். அப்போது அங்கு வந்த அதே கிராமத்தை சேர்ந்த மாரியப்பன் (35) என்பவர் வாசுவை கிரிக்கெட் ஸ்டெம்ப்பால் தாக்கி தலையில் கல்லை போட்டு கொன்று விட்டு தப்பிச் செல்ல முயன்றபோது வாசு உயிரிழந்து கிடப்பதை கண்ட டேங்கர் லாரி ஓட்டுநர் கூச்சலிட்டார். இதைத் தொடர்ந்து கிராம மக்கள் மாரியப்பனை துரத்தி சென்று கொள்வாய் ஏரியில் மடக்கி பிடித்தனர்.
இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த செங்கல்பட்டு தாலுகா போலீஸார் உடலை மீட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். காவல்துறையின் தடயவியல் துறை நிபுணர்கள் தடயங்களை சேகரித்தனர். சம்பவ இடத்தை செங்கல்பட்டு காவல் கண்காணிப்பாளர் புகழேந்தி கணேஷ் ஆய்வு செய்தார். இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து மாரியப்பனை கைது செய்த செங்கல்பட்டு தாலுகா போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
நடவடிக்கை எடுக்க கோரிக்கை: கொலையாளி மாரியப்பன் அந்தப் பகுதியில் செல்லும் லாரிகளை மடக்கி பணம் கேட்டு மிரட்டி வருவதாக கூறப்படுகிறது. அதே போல் சமீபத்தில் வாசு அவர்களின் லாரியை மடக்கி பணம் கேட்டு தகராறு செய்துள்ளார். அப்போது வாசு தரப்பில் மாரியப்பனை பிடித்து உட்கார வைத்து தாக்கியுள்ளனர். இதனால், ஆத்திரமடைந்த மாரியப்பன், தக்க சமயம் பார்த்து வாசுவை தாக்கி கொலை செய்துள்ளார் என்று விசாரணையில் தெரியவந்துள்ளது. வருவாய்த் துறை, காவல் துறை உயர் அதிகாரிகள் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT