Published : 17 Sep 2025 06:14 AM
Last Updated : 17 Sep 2025 06:14 AM
சென்னை: கடத்தல் கும்பல்களிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட, ரூ.5 கோடி மதிப்புள்ள போதைப் பொருட்கள் தீயிலிட்டு அழிக்கப்பட்டது. தமிழகம் முழுவதும் போதைப் பொருள் கடத்தல், பதுக்கல் மற்றும் விற்பனையை தடுக்கும் வகையில், அமலாக்கப் பணியகம் சிஐடி என்னும் போதைப் பொருள் நுண்ணறிவு பிரிவு போலீஸார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
இப்பிரிவு போலீஸாரால் 428 வழக்குகளில் கைப்பற்றப்பட்ட 4,727 கிலோ கஞ்சா, 0.72 கி.கிராம் ஹெராயின் உள்பட மொத்தம் ரூ.5 கோடி மதிப்பிலான போதைப் பொருளை, அப்பிரிவு ஐ.ஜி செந்தில் குமாரி தலைமையிலான போலீஸார் செங்கல்பட்டில் உள்ள தென்மேல்பாக்கம் பகுதியில் தீயிலிட்டு நேற்று அழித்தனர்.
இந்தாண்டில் மட்டும் இதுவரை 1,742 வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட மொத்தம்,26,329 கிலோ கஞ்சா, 1.862 கிலோ ஹெராயின், 245 கிலோ கஞ்சா சாக்லெட், 1.61 கிலோ மெத்தம்பெட்டமைன் உள்ளிட்ட ரூ.27 கோடி மதிப்பிலான போதைப் பொருளை, போதைப் பொருள் நுண்ணறிவு பிரிவு போலீஸார் ஏற்கனவே அழித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும், போதைப் பொருள் நடமாட்டம் தொடர்பாக தகவல் கிடைத்தால் பொது மக்கள் 10581 என்ற இலவச உதவி எண்ணிலும், 94984 10581 என்ற வாட்ஸ்அப் மூலமாகவும் அல்லது spnibcid@gmail.com என்ற மின்னஞ்சல் மூலமாகவும் தெரிவிக்கலாம் என போலீஸார் தெரிவித்துள்ளனர்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT