Published : 16 Sep 2025 08:48 PM
Last Updated : 16 Sep 2025 08:48 PM
பூந்தமல்லி: திருவேற்காடு அருகே சாலைகளில் தாறுமாறாக ஓடிய கார் மோதி இருவர் உயிரிழந்தனர்; 3 பேர் காயமடைந்தனர். இந்தச் சம்பவத்தில் 7 வாகனங்கள் சேதமடைந்தன.
தாம்பரம் - புழல் பைபாஸ் சாலை, போரூர் சுங்கச்சாவடி அருகே இன்று காலை தாறுமாறாக ஓடிய கார் ஒன்று, முன்னால் சென்ற 2 பைக்குகளை இடித்துவிட்டு நிற்காமல் வேகமாக சென்றுள்ளது. தொடர்ந்து அந்தக் கார், மதுரவாயல் மேம்பாலத்தில் இருந்து கீழே இறங்கி, சென்னை- பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் வானகரம் அருகே சென்றபோதும் வேகமாக சென்றதால் ஆட்டோ, 2 பைக்குகள் மீது அடுத்தடுத்து மோதி விட்டு நிற்காமல் சென்றுள்ளது.
இதில், இருசக்கர வாகனங்களில் சென்றவர்கள் நிலை தடுமாறி கீழே விழுந்து படுகாயமடைந்தனர். தொடர்ந்து, அந்த கார், திருவேற்காடு அருகே வேலப்பன்சாவடி பகுதியில் 2 பைக்குகள் மீது மோதி விட்டு நிற்காமல் வேகமாக சென்றுள்ளது. இதனிடையே, தாறுமாறாக ஓடிய காரினை அப்பகுதி மக்களின் உதவியுடன் போக்குவரத்து போலீஸார் மடக்கி பிடித்தனர்.
ஆத்திரத்தில் இருந்த பொதுமக்கள், தொடர் விபத்துகளை ஏற்படுத்திய கார் கண்ணாடிகளை அடித்து நொறுக்கியதோடு, விபத்துகளை ஏற்படுத்திய நபரையும் தாக்கியுள்ளனர். பிறகு, அந்த நபரை ஆவடி போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீஸார், காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில், தொடர் விபத்துகளை ஏற்படுத்திய நபர், வேலப்பன்சாவடி பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் வசித்து வரும் சாய் ஸ்ரீனிவாசன் (35) என்பதும், துரைப்பாக்கம் தனியார் மென்பொருள் நிறுவன ஊழியர் என்பதும், மனைவியுடன் ஏற்பட்ட தகராறு காரணமாக குழந்தையை காரில் உட்கார வைத்துக் கொண்டு காரை வேகமாக ஓட்டிச் சென்று சாலைகளில் சென்ற வாகனங்கள் மீது மோதி இடித்து தள்ளியதும் தெரியவந்தது.
இந்த தொடர் விபத்தில், அயனாவரத்தைச் சேர்ந்த அர்ஜுன் (33), வானகரம் பகுதியை சேர்ந்த கிருஷ்ண பிரசாத் (62) ஆகிய இருவர் உயிரிழந்தனர். மேலும் 3 பேர் காயமடைந்துள்ளனர். இந்த விபத்துகள் குறித்து மதுரவாயல் மற்றும் ஆவடி போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீஸார் வழக்குப் பதிவு செய்து சாய் ஸ்ரீனிவாசனை கைது செய்துள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT