Published : 14 Sep 2025 12:32 AM
Last Updated : 14 Sep 2025 12:32 AM
சென்னை: ஒரு லட்சம் ரூபாய் முதலீடு செய்தால் ரூ.1 கோடி லாபம் கிடைக்கும் என இரிடியம் பெயரில் தமிழகம் முழுவதும் கோடிக்கணக்கில் பண மோசடியில் ஈடுபட்டதாக 30 பேரை சிபிசிஐடி போலீஸார் கைது செய்துள்ளனர்.
ரிசர்வ் வங்கி சார்பில் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் கடந்த ஆண்டு ஒரு புகார் கொடுக்கப்பட்டது. அதில், ‘பிளாட்டினம், தங்கத்தைவிட அதிக மதிப்புடைய இரிடியத்தை விற்பனை செய்து ரிசர்வ் வங்கியில் கோடிக்கணக்கில் பணம் வைத்திருப்பதாகவும், அந்த பணத்தை பெற சேவை கட்டணம் செலுத்த வேண்டும் என்றும், இதற்காக ஒரு லட்சம் ரூபாய் முதலீடு செய்தால் ரூ.1 கோடி லாபம் கிடைக்கும் என்றும் ஆசை வார்த்தை கூறி மோசடி கும்பல்கள் பண மோசடியில் ஈடுபட்டு வருகின்றன. மேலும், ரிசர்வ் வங்கி அதிகாரிகள் போல ஆள்மாறாட்டம் செய்தும், போலி ஆவணங்களை தயாரித்தும் இந்த மோசடி அரங்கேற்றப்பட்டுள்ளது. இதில் சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று கூறப்பட்டிருந்தது.
இந்த விவகாரம் தொடர்பாக சிபிசிஐடி பிரிவு போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரித்தனர். முதல்கட்டமாக ரூ.4.5 கோடி மோசடியில் ஈடுபட்ட 6 பேரை கடந்த ஜூன் மாதம் கைது செய்தனர். இதே பாணியில் தமிழகத்தை சேர்ந்த பலரிடம் லட்சக்கணக்கில் மோசடி நடைபெற்றிருக்கும் தகவல் சிபிசிஐடி போலீஸாருக்கு கிடைத்தது. அதன்பேரில் தாமா கவே முன்வந்து வழக்கு பதிவு செய்தனர்.சேலம் சிபிசிஐடி போலீஸார் பதிவு செய்த இந்த வழக்கில், மோசடி தொடர்பாக 13 பேர் கைது செய்யப்பட்டனர்.
இந்த வழக்கு விசாரணையின் தொடர்ச்சியாக சிபிசிஐடி போலீஸார் நேற்று முன்தினம் அதிரடி சோதனையில் இறங்கினர். குறிப்பாக சென்னை, வேலூர், ராணிப்பேட்டை, திருச்சி, கரூர், நெல்லை உள்ளிட்ட 20 மாவட்டங்களில் 43 இடங்கள், வெளி மாநிலங்களில் 4 இடங்கள் என மொத்தம் 47 இடங்களில் சோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில், மெகா மோசடிக்கு மூளையாக செயல்பட்ட சென்னையை சேர்ந்த சுவாமிநாதன் மற்றும் காட்பாடியை சேர்ந்த ஜெயராஜ், புதுக்கோட்டை குடுமியான்மலையை சேர்ந்த ரவிச்சந்திரன், மணப்பாறையை சேர்ந்த ஞானப்பிரகாசம், திண்டுக்கல்லை சேர்ந்த டெய்சி ராணி ஆகிய 5 முக்கிய நபர்கள் உட்பட 30 பேர்கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கு தொடர்பாக தீவிர விசாரணை நடந்து வருகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT