Published : 13 Sep 2025 07:07 AM
Last Updated : 13 Sep 2025 07:07 AM
சென்னை: ஓட்டேரி பகுதியைச் சேர்ந்த 31 வயது பெண் ஒருவர் பைக் டாக்ஸி ஓட்டி வருகிறார். நேற்று முன்தினம் மதியம், கோயம்பேடு முதல் அரும்பாக்கம், எம்.எம்.டி.ஏ. வரை செல்ல ஓர் அழைப்பு வந்தது. அந்த வாடிக்கையாளரை செல்போனில் தொடர்பு கொண்ட போது எதிர்முனையில் பேசிய இளைஞர் தனது தாயாரை அழைத்துச் செல்லபுக் செய்ததாக தெரிவித்தார்.
இதையடுத்து அந்த பெண் அங்கு சென்றபோது, அங்கு நின்றிருந்த இளைஞர், ‘நான்தான் சவாரிக்காக அழைத்தேன். கல்லூரிக்கு நேரமாவதால் என்னை கல்லூரியில் இறக்கிவிடுங்கள்’ என்று கேட்டுக் கொண்டார். முதலில் தயங்கிய அந்த பெண், பின்னர் அழைத்துச் செல்ல சம்மதித்து அந்த இளைஞரை இருசக்கர வாகனத்தில் ஏற்றிச் சென்றார்.
வாகனம் சென்று கொண்டிருந்த போது பின்னால் அமர்ந்திருந்த இளைஞர் வாகனத்தை ஓட்டிச் சென்ற இளம் பெண்ணிடம் பாலியல் சீண்டலில் ஈடுபடத் தொடங்கினார். இதனால் கோபமடைந்த அந்த பெண் வாகனத்தை சாலையோரம் நிறுத்தி, இளைஞரைக் கண்டித்தார். இதனால், பயந்துபோன அந்த இளைஞர் அங்கிருந்து தப்பி ஓடினார்.
இந்த விவகாரம் தொடர்பாக பாதிக்கப்பட்ட பெண் அரும்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்படி, போலீஸார் பெண் வன்கொடுமைதடுப்புச் சட்டம் உட்பட மேலும் சில பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிந்து விசாரித்தனர். இதில், பெண் பைக் டாக்ஸி ஓட்டுநரிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டது அமைந்தகரையைச் சேர்ந்த இம்ரான் (19) என்பதும், இவர் ராயப்பேட்டையில் உள்ள கல்லூரியில் படித்து வருவதும் தெரியவந்தது. இதையடுத்து, அவரை போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT