Published : 11 Sep 2025 05:59 AM
Last Updated : 11 Sep 2025 05:59 AM

கல்லணை கால்வாயில் குதித்து 2 குழந்தைகள் உட்பட 4 பேர் தற்கொலை: குடும்ப பிரச்சினையில் விபரீத முடிவு

தஞ்சாவூர்: தஞ்சாவூர் கல்லணையில் குதித்து 2 குழந்தைகள், 2 பெண்கள் தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தில், அவர்கள் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என்பதும், குடும்பப் பிரச்சினையில் விபரீத முடிவு எடுத்துள்ளனர் என்பதும் போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது. தஞ்சாவூர் பூச்சந்தை அருகே கல்லணைக் கால்வாயில் உள்ள 20 கண் பாலத்தில் இருந்து 5 வயது சிறுவன் மற்றும் கைக்குழந்தை யுடன் 2 பெண்கள் நேற்று முன்தினம் ஆற்றில் குதித்தனர்.

இதைப் பார்த்த அப்பகுதி மக்கள் ஆற்றில் குதித்து, அவர்களை மீட்க முயற்சித்தனர். இதில், கைக்குழந்தை தவிர மற்ற 3 பேரும் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டனர். தொடர்ந்து, தீயணைப்புத் துறையினர் வரவழைக்கப்பட்டு, கைக்குழந்தையைத் தேடும் பணி நடைபெற்றது. இதில், துறையுண்டார்கோட்டை பகுதியில் குழந்தையின் உடல் நேற்று கண்டெடுக்கப்பட்டது.

இதுதொடர்பாக தஞ்சாவூர் தாலுகா போலீஸார் வழக்குப் பதிவு செய்து, ஆற்றில் குதித்து உயிரிழந்தவர்கள் யார் என்பது குறித்து விசாரித்து வந்தனர். இதில், அவர்கள் தஞ்சாவூர் பொட்டுவாச்சாவடி சாலை யாகப்பா நகரைச் சேர்ந்த தங்கராஜ் மகள்கள் ராஜேஸ்வரி(30), துர்காதேவி(28), ராஜேஸ்வரியின் மகன் ஹரிஷ்(6), துர்காதேவிக்கு பிறந்து 10 நாட்களே ஆன கைக்குழந்தை ஆகியோர் என்பது தெரியவந்தது.

மேலும், ராஜேஸ்வரியின் கணவர் விஜயராகவன் அண்மையில் உடல்நலம் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார். இதனால், தனது மகனுடன் தந்தை வீட்டில் ராஜேஸ்வரி வசித்து வந்துள்ளார். அதேபோல, காதல் திருமணம் செய்து கொண்ட துர்காதேவி கர்ப்பிணியாக இருந்த நிலையில், கணவருடன் ஏற்பட்ட தகராறு காரணமாக, அண்மையில் தந்தை வீட்டுக்கு வந்துவிட்டார். அங்கு, 10 நாட் களுக்கு முன்பு துர்காதேவிக்கு ஆண் குழந்தை பிறந்தது.

இந்நிலையில், தங்கள் இருவரின் வாழ்க்கையும் சரியாக அமையவில்லை என வேதனையுடன் இருந்துவந்த சகோதரிகள் இருவரும் நேற்று முன்தினம் தங்களின் குழந்தைகளுடன் ஆற்றில் குதித்து தற்கொலை செய்துகொண்டுள்ளனர் என்பது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. இதுகுறித்து போலீஸார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x