Published : 10 Sep 2025 03:12 PM
Last Updated : 10 Sep 2025 03:12 PM
விருதுநகர்: மரக்கார் பிரியாணி கடை மோசடி வழக்கில் அதன் மண்டல மேலாளர் ஒருவரை போலீஸார் இன்று கைது செய்தனர்.
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகேயுள்ள விஜயரங்கபுரத்தை சேர்ந்தவர் கங்காதரன் (45). இவரது மனைவி தேவதாஸ் மரியநாயகம். இருவரும் மரக்கார் பிரியாணி என்ற பெயரில் பிரியாணி நிறுவனத்தை நடத்தி வந்தனர்.
இவர்கள் இருவரும் தங்களது பிரயாணி நிறுவனத்தின் பெயரில் கடைகளை தொடங்குபவர்களுக்கு கிளை உரிமம் வழங்குவதாகவும் கடைகளை நிறுவனமே நடத்தி நிர்வகித்து வருமானத்தில் 10 சதவீதம் மற்றும் மாதந்தோறும் ரூ.50 ஆயிரம் லாபம் ஈட்டலாம் என பொது மக்களிடம் தெரிவித்து 21 இடங்களில் மாதிரி கடைகளை திறந்தனர்.
பொதுமக்களை நம்ப வைத்து தமிழகம், கர்நாடகம் மற்றும் ஆந்திராவைச் சேர்ந்த 239 பேரிடம் தலா ரூ.5.18 லட்சம் வசூலித்து சுமார் ரூ.13 கோடிக்கும் மேல் முதலீடு பெற்று நம்பிக்கை மோசடி செய்ததாக விருதுநகர் பொருளாதார குற்றப் பிரிவில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில், கங்காதரன், சண்முகசுந்தரம், சதீஸ்குமார் மற்றும் பிரவீன் ராவ் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இவர்களில் கங்காதரன் குண்டர் தடுப்புச் சட்டத்தின்கீழ் சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்நிலையில், இந்த வழக்கில் தேடப்பட்டு வந்த இந்நிறுவனத்தின் முன்னாள் மண்டல மேலாளரான மதுரையைச் சேர்ந்த சுந்தர்ராஜ் (34) என்பவரை விருதுநகர் பொருளாதார குற்றப் பிரிவு போலீஸார் இன்று கைது செய்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT