Published : 10 Sep 2025 06:19 AM
Last Updated : 10 Sep 2025 06:19 AM
திருப்பூர்: காப்பகத்தில் தங்கிப் படித்து வந்த 14 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக கைதான பாதிரியாருக்கு 7 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி பல்லகவுண்டம்பாளையம் கூனம்பட்டியை சேர்ந்தவர் ஆண்ட்ரூஸ் (50). பாதிரியரான இவர், அப்பகுதியில் ஆதரவற்ற பள்ளி மாணவர்களுக்கான காப்பகம் நடத்தி வந்தார். இதில் 20 குழந்தைகள் தங்கிப் படித்துவந்தனர்.
கடந்த 2022 டிசம்பர் மாதம் காப்பகத்தில் தங்கி படித்த 14 வயது சிறுமிக்கு, பாதிரியார் ஆண்ட்ரூஸ் பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். உடல் நலக்குறைவு ஏற்பட்டதால் அந்த சிறுமி வீட்டுக்குச் சென்று, தனது தாயாரிடம் தனக்கு நேர்ந்த கொடுமையை தெரிவித்தார். இதில் அதிர்ச்சி அடைந்த தாயார் ஊத்துக்குளி காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
போலீஸார் விசாரணை நடத்தி ஆண்ட்ரூஸை கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணை திருப்பூர் மாவட்ட மகளிர் நீதிமன்றத்தில் நடந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி கோகிலா, குற்றம் சுமத்தப்பட்ட பாதிரியார் ஆண்ட்ரூஸுக்கு 7 ஆண்டு கடுங்காவல் சிறை தண்டனை மற்றும் ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்து நேற்று உத்தரவிட்டார். இதையடுத்து, ஆண்ட்ரூஸ் கோவை சிறையில் அடைக்கப்பட்டார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT