Published : 10 Sep 2025 06:14 AM
Last Updated : 10 Sep 2025 06:14 AM
விருத்தாசலம்: கடலூர் மாவட்டம் விருத்தாசலம் நகரில் போதையில் காவலர்கள் உட்பட 6 பேரைத் தாக்கிய ரவுடிகள் இருவரை போலீஸார் துப்பாக்கியால் சுட்டுப் பிடித்தனர். மேலும், தப்பியோடிய ஒருவரை போலீஸார் தேடி வருகின்றனர்.
விருத்தாசலம் பழமலைநாதர் நகரில் நேற்று அதிகாலை 3 இளைஞர்கள் கட்டுமானப் பணி நடந்து வரும் வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த கட்டிடத் தொழிலாளி கார்த்திக் (23) என்பவரை சரமாரியாகத் தாக்கினர். அங்கிருந்து தப்பியோடிய கார்த்திக், அருகில் உள்ள மருத்துவமனையில் தஞ்சமடைந்தார்.
பின்னர் அங்கிருந்து வெளியேறிய 3 இளைஞர்களும், கள்ளக்குறிச்சி செல்லும் அரசுப் பேருந்தில் ஏறி மது பாட்டிலைக் காண்பித்து ரகளையில் ஈடுபட்டனர். மேலும், பேருந்து ஓட்டுநர் கணேசனை சராமாரியாக தாக்கினர்.
இதனால் பயணிகள் கூச்சலிடவே மூவரும் அங்கிருந்து தப்பிச் சென்று, அரசு மருத்துவமனை வளாகம் முன்புள்ள பெட்டிக்கடைகளை உடைத்தனர். மேலும், கடை உரிமையாளர் ராஜேந்திரன், சுந்தரமூர்த்தி ஆகியோரை பாட்டிலால் தாக்கினர். இவர்கள் தாக்கியதில் காயமடைந்த கார்த்திக், கணேசன், ராஜேந்திரன், சுந்தரமூர்த்தி ஆகியோர் விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
இந்த சம்பவங்களின்போது 3 பேரில் இருவர் பொதுமக்களைத்தாக்க, மற்றொருவர் செல்போனில் வீடியோவாக பதிவு செய்து வந்துள்ளார். இது தொடர்பாக போலீஸார் நடத்திய விசாரணையில், பொதுமக்களைத் தாக்கியவர்கள் பழமலைநாதர் நகரைச் சேர்ந்த கந்தவேல், சிவா, பாலாஜி என்பதும், மதுபோதையில் ரகளையில் ஈடுபட்டதும் தெரியவந்தது. அவர்களை போலீஸார் தேடினர்.
விருத்தாசலத்தை அடுத்த கோபுராபுரம் விளை நிலப் பகுதியில் அவர்கள் பதுங்கியிருப்பதை அறிந்த மங்கலம்பேட்டை காவல் ஆய்வாளர் பார்த்தசாரதி, உதவி ஆய்வாளர் சந்துரு, காவலர்கள், வீரமணி, வேல்முருகன் ஆகியோர் அங்கு சென்றனர். அப்போது 3 பேரில் ஒருவரான கந்தவேல், காவலர்கள் வீரமணி, வேல் முருகனை அரிவாளல் வெட்டினார்.
உடனே உதவி ஆய்வாளர் சந்துரு கந்தவேலின் காலில் துப்பாக்கியால் சுட்டு, அவரைப் பிடித்தார். தப்பியோடிய சிவா கீழே விழுந்ததில் கால், கை எலும்பு முறிந்தது. பாலாஜி தப்பியோடி விட்டார். கடலூர் எஸ்.பி. ஜெயக்குமார் செய்தியாளர்களிடம் கூறும்போது, “தாக்குதலில் ஈடுபட்ட கந்தவேல், சிவா, பாலாஜி ஆகியோர் காஸ் கிடங்கில் பணிபுரிந்து வருகின்றனர். இவர்கள் மீது அடிதடி உள்ளிட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன. பொதுமக்களைத் தாக்கியதை வீடியோ எடுத்து இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளனர்” என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT