Published : 09 Sep 2025 06:33 AM
Last Updated : 09 Sep 2025 06:33 AM
சென்னை: சென்னை, திருவான்மியூரை சேர்ந்த போஜய்யா என்பவரது மனைவி தேவேந்திரம் (38). மூக்கடைப்பு மற்றும் தலைவலி காரணமாக கடந்த 2005-ம் ஆண்டு, வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையின் ஓர் அங்கமாக உள்ள காது, மூக்கு, தொண்டை ஆராய்ச்சி மையத்துக்கு சிகிச்சைக்காக சென்றுள்ளார்.
அங்கு சிகிச்சை மேற்கொண்ட நிலையில், திடீரென, அவர் மூளைச்சாவு அடைந்து இறந்து விட்டதாக, கடந்த 2005 அக்.12 அன்று அந்த மருத்துவமனை நிர்வாகிகள் அறிவித்தனர். தனது மனைவியின் மரணத்துக்கு மருத்துவர்களின் அலட்சியமும், சேவை குறைபாடுமே காரணம் எனக் கூறி, ரூ.1 கோடி இழப்பீடு கோரி மாநில நுகர்வோர் ஆணையத்தில் போஜய்யா வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கு விசாரணை, மாநில நுகர்வோர் ஆணையத்தின் தலைவரான ஓய்வு பெற்ற நீதிபதி ஆர்.சுப்பையா முன்பாக நடந்தது. அப்போது, போஜய்யா தரப்பில் வழக்கறிஞர் தேன்மொழி சிவபெருமாள் ஆஜராகி, மருத்துவர்களின் கவனக் குறைவு மற்றும் அலட்சியப் போக்கின் காரணமாகவே மனுதாரரின் மனைவி சிறுவயதில் அநியாயமாக இறந்துள்ளார் என வாதிட்டார்.
அப்போது, தனியார் மருத்துவமனை நிர்வாகம் தரப்பில், தங்களது மருத்துவமனையில் பல்வேறு துறைகளைச் சேர்ந்த மருத்துவர்களுக்கு வாடகை அடிப்படையில் இடம் ஒதுக்கி கொடுக்கப்பட்டு, நோயாளிகளுக்கு மருத்துவ ஆலோசனைகளை வழங்கி வருகின்றனர். அவர்கள் அளிக்கும் சிகிச்சையில் பிரச்சினை ஏற்பட்டால், சம்பந்தப்பட்ட மருத்துவ ஆலோசகரே அதற்கு பொறுப்பேற்க முடியுமேயன்றி, மருத்துவமனை நிர்வாகம் பொறுப்பேற்காது என வாதிடப்பட்டது.
அதே போல, சிகிச்சையளித்த காது, மூக்கு, தொண்டை ஆராய்ச்சி மையம் சார்பில், மூளை நரம்பில் ஏற்பட்ட வீக்கம் மற்றும் ரத்தக் கசிவு காரணமாகவே மனுதாரரின் மனைவி மூளைச்சாவு அடைந்து இறந்ததாக தெரிவிக்கப்பட்டது. அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட ஆணையம் பிறப்பித்துள்ள உத்தரவில், ”மனுதாரரின் மனைவிக்கு காலை சிற்றுண்டிக்கு பிறகு 6 மணி நேரம் கழித்தே மயக்க மருந்து கொடுக்க வேண்டும் என்ற நடைமுறை கடைபிடிக்கப்படவில்லை.
நோயாளிக்கு ஏற்படும் எதிர்மறை விளைவுகளை கவனத்தில் கொள்ள சிகிச்சையளித்த மருத்துவர்கள் தவறிவிட்டனர். மருத்துவர்களின் அலட்சியமே மனுதாரரின் மனைவியின் மரணத்துக்கு காரணம். எனவே, சிகிச்சையளித்த அறுவை சிகிச்சை நிபுணர் ஜெயராமி ரெட்டி, மயக்கவியல் நிபுணர் கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் இழப்பீட்டுத் தொகையாக ரூ. 10 லட்சத்தையும், வழக்கு செலவுத் தொகையாக ரூ. 50 ஆயிரத்தையும் மனுதாரருக்கு 8 வார காலத்தில் வழங்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT