Published : 09 Sep 2025 07:20 AM
Last Updated : 09 Sep 2025 07:20 AM
கும்பகோணம்: கும்பகோணத்தில் கீரை வியாபாரி கொலை வழக்கில் 4 பேருக்கு ஆயுள் சிறை தண்டனையும், பெண்ணுக்கு இரட்டை ஆயுள் தண்டனையும் விதித்து கும்பகோணம் நீதிமன்றம் நேற்று தீர்ப்பளித்தது. தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே வலையபேட்டை மாங்குடி பகுதியைச் சேர்ந்தவர் பன்னீர்செல்வம்(55). கீரை வியாபாரி. இவரது மைத்துனர் மணியின் மகன்களான அபினேஷ், அஜய் ஆகியோர் 2020-ம் ஆண்டு மே மாதம் நண்பர் ஒருவர் வீட்டில் கேரம் விளையாடிக் கொண்டிருந்தனர்.
அப்போது, அங்கு வந்த அதபகுதியைச் சேர்ந்த சவுந்தர்ராஜன் மகன் அருண்குமார்(36) மது போதையில் தகாத வார்த்தையில் பேசிக்கொண்டு இருந்துள்ளார். அவரை அபினேஷ் கண்டித்து அங்கிருந்து அனுப்பிவிட்டார். சில நாள் கழித்து அபினேஷ் வீட்டுக்குச் சென்ற அருண்குமார், அங்கிருந்த அபினேஷ், அஜய் உள்ளிட்டவர்களை தாக்கியுள்ளார். மறுநாள் இரவு மீண்டும் அபினேஷ் வீட்டுக்கு சென்ற அருண்குமார் தரப்பினர் அங்கிருந்த அபினேஷ் தரப்பினரிடம் தகராறில் ஈடுபட்டனர்.
அப்போது, அருண்குமாரின் தந்தை சவுந்தர்ராஜன்(64), தாய் ருக்மணி(55), உறவினர்கள் சுரேஷ்(37), பாலாஜி(30) ஆகியோர் சேர்ந்து அபினேஷ் தரப்பினரை தாக்கினர். இதில், அபினேஷின் உறவினர்கள் ரகுபதி, கிருஷ்ணமூர்த்தி, அருள் ஆகியோர் காயமடைந்தனர்.
அப்போது அங்கு வந்த கீரை வியாபாரியான பன்னீர்செல்வம் இரு தரப்பினரையும் சமாதானப் படுத்த முயன்றார். இதில், அருண்குமார் தரப்பினர் அரிவாளால் வெட்டியதில் பன்னீர்செல்வம் பலத்த காயமடைந்தார். இதையடுத்து, கும்பகோணம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட பன்னீர்செல்வம் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இதுகுறித்து ரகுபதி அளித்த புகாரின்பேரில் கும்பகோணம் தாலுகா போலீஸார் வழக்குப் பதிவு செய்து அருண்குமார், அவரது தந்தை சவுந்தர்ராஜன், தாய் ருக்மணி, உறவினர்கள் சுரேஷ், பாலாஜி ஆகியோரைக் கைது செய்தனர்.
இவ்வழக்கு கும்பகோணம் கூடுதல் மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்நிலையில் இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியும், கொலைக்கு தூண்டுதலாக இருந்தவருமான ருக்மணிக்கு இரட்டை ஆயுள் தண்டனையும், சவுந்தர்ராஜன், அவரது மகன் அருண்குமார், உறவினர்கள் பாலாஜி, சுரேஷ் ஆகியோருக்கு ஆயுள் தண்டனையும் விதித்து நீதிபதி நேற்று தீர்ப்பளித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT