Published : 09 Sep 2025 07:00 AM
Last Updated : 09 Sep 2025 07:00 AM
விருத்தாசலம்: விருத்தாசலம் சுற்றுவட்டாரங்களில் பல்வேறு நபர்களிடம் ரூ.6 கோடி வரை மோசடியில் ஈடுபட்ட பாமக இளைஞரணி நிர்வாகி கைது செய்யப்பட்டார். கடலூர் மாவட்டம் கருவேப்பிலங்குறிச்சியைச் சேர்ந்த கிருபை என்பவர் விருத்தாசலம் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்தார்.
அதில், “பெண்ணாடத்தைச் சேர்ந்த ஷேக்தாவூத் மகன் சலீம் (28) என்பவர், வங்கியில் ஏலம் விடப்படும் நகைகளை குறைந்த விலைக்கு வாங்கித் தருவதாகக் கூறி, ரூ.10 லட்சத்தை என்னிடம் வாங்கினார். ஆனால் நகையை வாங்கித் தராமல் ஏமாற்றுகிறார். பணத்தைத் திரும்பக் கேட்டால் கொலை மிரட்டல் விடுக்கிறார்” எனக் குறிப்பிட்டிருந்தார்.
இதேபோன்று பெண்ணாடத்தைச் சேர்ந்த மெய்கண்டநாதன் என்பவர், மருத்துவப் படிப்பு பயில வங்கிக்கடன் பெற முயற்சித்தபோது, விரைவாக கடன் வாங்கித் தருவதாகக் கூறி, அவரிடம் ரூ.6 லட்சம் வரை சலீம் மோசடி செய்துள்ளதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதுபோன்று 17 பேரிடம் ரூ.1.75 கோடி வரை சலீம் முறைகேடு செய்திருப்பதாக விருத்தாசலம் காவல்நிலையத்தில் புகார்கள் பதிவாகியுள்ளன.
இதுதவிர, சலீம் மீது குற்றச்சாட்டுகள் கூறி பல்வேறு மனுக்கள் பெண்ணாடம், திட்டக்குடி, கருவேப்பிலங்குறிச்சி காவல் நிலையங்களுக்கு வந்துள்ளன. அந்த வகையில் மொத்தத்தில் ரூ.6 கோடி வரை மோசடி செய்திருப்பதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், சலீம் மீது விருத்தாசலம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் ஐயனார் வழக்குப்பதிவு செய்தார். அதைத்தொடர்ந்து, திருப்பூரில் தலைமறைவாக இருந்த சலீமை போலீஸார் நேற்று கைது செய்தனர். கைது செய்யப்பட்டுள்ள சலீம், கடலூர் மேற்கு மாவட்டபாமக இளைஞரணி நிர்வாகியாக (அன்புமணி அணி) உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT