Last Updated : 07 Sep, 2025 06:33 PM

1  

Published : 07 Sep 2025 06:33 PM
Last Updated : 07 Sep 2025 06:33 PM

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் கண்காணிப்பாளர் - காவலர் இடையே மோதல், அடிதடி

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள கண்காணிப்பாளர் விவேக்.

தூத்துக்குடி: திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் மூத்த குடிமக்கள் வழியில் தங்களுக்கு வேண்டியவர்களை போலீஸார் அழைத்துச் சென்றனர். அதனை தடுத்த உள்துறை கண்காணிப்பாளருக்கும், போலீஸாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு இருவரும் மாறிமாறி தாக்கி கொண்டனர்.

உள்துறை கண்காணிப்பாளரை போலீஸார் அழைத்துச் சென்று தாக்கியதாக புகார் கூறப்பட்டுள்ளது. இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சிவகங்கை மாவட்டம் திருமாஞ்சோலை அரசனூரைச் சேர்ந்தவர் விவேக் (34). இவர் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் உள்துறை கண்காணிப்பாளராக பணியாற்றி வருகிறார். இவர் இன்று (செப்.7) காலை உள்துறை பணியில் இருந்துள்ளார். இன்று விடுமுறை தினம் என்பதால் கோயிலில் பொது தரிசனம் வழி, ரூ.100 கட்டண தரிசன வழி மற்றும் மூத்த குடிமக்கள் வழிகளில் கூட்டம் அலைமோதியது.

இந்நிலையில், குலசேரகரப்பட்டணம் காவல் நிலையத்தில் பணியாற்றி வரும் காவலர் பிரபாகரன் (40) சிறப்பு பணிக்காக திருச்செந்தூர் கோயில் புறக்காவல் நிலையத்தில் இருந்துள்ளார். அப்போது அவர் தனக்கு வேண்டியவர்களை மூத்த குடிமக்கள் வழியில் அனுப்பி வைத்ததாக கூறப்படுகிறது.

உள்துறை பணியில் இருந்த கண்காணிப்பாளர் விவேக் அங்கு வந்து பேரிகார்டை வைத்து தடுப்பு ஏற்படுத்தியதாக கூறப்படுகிறது. இதனால் உள்துறை கண்காணிப்பாளர் விவேக்குக்கும், காவலர் பிரபாகரனுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள காவலர் பிரபாகரன்.

இந்த வாக்குவாதம் முற்றிய நிலையில் காவலர் பிரபாகரன், விவேக்கை தாக்கியுள்ளார். விவேக்கும் பதிலுக்கு தாக்கியுள்ளார். இதனால் இருவருக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டது. இதனை தொடர்ந்து உள்துறை கண்காணிப்பாளர் விவேக்கை, போலீஸார் புறக்காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று அங்கு வைத்து காவலர் பிரபாகரன் மற்றும் சிலர் சேர்ந்து அடித்து உதைத்ததாக கூறப்படுகிறது.

இதையடுத்து உள்துறை கன்காணிப்பாளர் விவேக் கோயில் ஆம்புலன்ஸ் வாகனம் மூலம் திருச்செந்தூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு அங்கு அனுமதிக்கப்பட்டார். பின்னர் அவர் மேல் சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

இதற்கிடையே உள்துறை கண்காணிப்பாளருடன் கைகலப்பில் ஈடுப்பட்ட காவலர் பிரபாகரனும் 108 ஆம்புலன்ஸ் மூலம் திருச்செந்தூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார். கோயில் வளாகத்தில் உள்துறை கண்காணிப்பாளர் விவேக் மற்றும் காவலர் பிரபாகரன் கைகலப்பில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்தச் சம்பவம் குறித்து கோயில் காவல் ஆய்வாளர் கனகராஜன் விசாரணை நடத்தி வருகிறார். இதற்கிடையே கோயில் கண்காணிப்பாளர் - காவலர் இடையே நடந்த கைகலப்பு சம்பவம் குறித்த வீடியோ சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x