Published : 06 Sep 2025 05:51 AM
Last Updated : 06 Sep 2025 05:51 AM
சென்னை: தி.நகரில் தூய்மை பணியாளர்களை உருட்டுக்கட்டையால் தாக்கியதாக ஜவுளிக்கடை ஊழியர்கள் 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். தி.நகர், ரகநாதன் தெருவில் பிரபலமான ஜவுளிக்கடை ஒன்று உள்ளது.
இந்த கடையின் அருகே நேற்று முன்தினம் நள்ளிரவு துப்புறவு பணியாளர்கள் தூய்மைப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, ஒப்பந்த தூய்மைப் பணியாளர்களில் ஒருவரான மயிலாப்பூரைச் சேர்ந்த அர்ஜுன் (49) என்பவர், தான் குப்பையாக சேகரித்த அட்டைகளை சம்பந்தப்பட்ட ஜவுளிக்கடை ஷட்டர் அருகே வைத்துள்ளார்.
இதை கவனித்த ஜவுளிக்கடை ஊழியர்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இதில் இரு தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதைப் பார்த்த துப்புறவு கண்காணிப்பாளர் (சூப்பர்வைசர்) லட்சுமணன் (31) தனது ஊழியரான அர்ஜுனுக்கு ஆதரவாகப் பேசினார். இதனால், ஆத்திரமடைந்த ஜவுளிக்கடை ஊழியர்கள் 6 பேர் அருகே கிடந்த உருட்டுக் கட்டைகளால் இருவரையும் சரமாரியாக தாக்கினர்.
இதில், காயம் அடைந்த இருவரும் கே.கே.நகரில் உள்ள ஈஎஸ்ஐ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அங்கு இருவரின் தலையிலும் தையல் போடப்பட்டுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக மாம்பலம் போலீஸார் வழக்குப் பதிந்து தாக்குதலில் ஈடுபட்ட ஜவுளிக்கடை ஊழியர்கள் 6 பேரையும் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT