Published : 06 Sep 2025 06:35 AM
Last Updated : 06 Sep 2025 06:35 AM
சென்னை: தமிழகத்தில் இ-செலான் மோசடி அதிகம் நடைபெறுவதாக சைபர் குற்றப்பிரிவு எச்சரிக்கை விடுத்துள்ளது.
இது தொடர்பாக தமிழக சைபர் குற்றப்பிரிவு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:தமிழகத்தில் சமீபகாலமாக 2 வகையான சைபர் மோசடிகள் அதிகம் நடைபெறுவது கண்டறியப்பட்டுள்ளது.
வாகனங்கள் விதிமுறை மீறினால் இ-செலான்களை வாட்ஸ்-அப் மூலமாக அரசின் எந்த துறையும் அனுப்புவது கிடையாது. ஆனால், மோசடி கும்பல் வாட்ஸ்-அப் மூலம் போலி இ- செலான்களை அனுப்புகிறது.
இதன்மூலம் மோசடி நபர்கள், பொதுமக்களிடம் வங்கிக் கணக்குகளின் விவரங்களையும், ஒருமுறை மட்டுமே பயன்படுத்தக் கூடிய ரகசிய எண்ணையும் பெற்று பணத்தை அபகரிக்கின்றனர்.
பொதுமக்கள் இப்படிப்பட்ட மோசடியில் சிக்காமல் இருக்க, அரசின் அதிகாரபூர்வ இணையதளங்களுக்கு சென்று தங்களது வாகனம் போக்குவரத்து விதிமுறையில் ஈடுபட்டுள்ளதற்காக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதா என பார்த்து தெளிவுப்படுத்தி கொள்ள வேண்டும்.
இதுபோன்ற மோசடி சம்பவங்கள் அதிகளவில் நடைபெறுகிறது. இதேபோல சைபர் குற்றத்தில் பணத்தை இழந்தவர்களுக்கு உதவுவதுபோல நாடகமாடி பணத்தை பறிக்கும் மற்றொரு மோசடி சம்பவங்களும் நடைபெறுகிறது. இதற்காக மோசடி நபர்கள், சமூக ஊடகங்களில் சைபர் உதவி மையம் என்ற பெயரில் போலியான விளம்பரம் செய்து, பொதுமக்களை தொடர்பு கொள்ள வைக்கின்றனர்.
பொதுமக்கள் தொடர்பு கொள்ளும்போது, மோசடி நபர்கள் சைபர் குற்றப்பிரிவு அதிகாரிகள், சட்ட ஆலோசகர்கள் எனக்கூறி பேசுகின்றனர். சைபர் குற்றத்தில் இழந்த பணத்தை மீட்க கட்டணம் செலுத்த வேண்டும் எனக்கூறி பணத்தை பறித்துக் கொண்டு தலைமறைவாகி விடுகின்றனர்.
எனவே, பொதுமக்கள் சைபர் குற்றம் தொடர்பாக புகார் அளிக்க, சைபர் குற்றப்பிரிவை 1930 என்ற அதிகாரபூர்வ இலவச தொலைபேசி எண் மூலம் தொடர்பு கொள்ளலாம். தெரியாத செல்போன் எண்கள், வாட்ஸ்-அப், சமூக ஊடகங்கள் வாயிலாக சட்ட ஆலோசகர், சைபர் குற்றப்பிரிவு அதிகாரி எனக் கூறும் நபர்களை நம்பி ஏமாற வேண்டாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT