Published : 02 Sep 2025 07:42 AM
Last Updated : 02 Sep 2025 07:42 AM
புதுச்சேரி: ‘மொபைல் ஆப்’பில் தவணை முறையில் முதலீடு செய்தால், நாள்தோறும் ரொக்கப் பணம் தரப்படும் என 530 பேரிடம் பல கோடி ரூபாய் மோசடி நடந்துள்ளதாக புதுச்சேரி சைபர் க்ரைம் போலீஸார் தெரிவித்தனர்.
புதுச்சேரியில் கடந்த 3 மாதங்களாக ‘ஓஏஜி’ என்ற ‘மொபைல் ஆப்’ வழியே பல்வேறு தவணை முறைகளில் முதலீடு செய்தால் நாள்தோறும் ரொக்கப் பணம் தருவதாக அறிவித்துள்ளனர்.
அதன்படி ரூ.2 ஆயிரம் முதலீடு செய்தால் தினம் ரூ.100, ரூ.5 ஆயிரம் முதலீடு செய்தால் ரூ.250, ரூ.10 ஆயிரம் முதலீடு செய்தால் ரூ.500, ரூ.19,500 முதலீடு செய்தால் தினமும் ரூ.700 தருகிறோம் என்று விளம்பரப்படுத்தியுள்ளனர். இதை நம்பி பலர் ஆன்லைன் மூலம் பணத்தை செலுத்தியுள்ளனர். தொடக்கத்தில் முதலீடு செய்த தொகைக்கு ஏற்ப தினமும் பணம் வந்து கொண்டிருந்தது.
இவ்வாறு பணம் பெற்றவர்கள் தங்களின் நண்பர்கள், உறவினர்களுக்கு இதனை அறிமுகப்படுத்தியுள்ளனர். அவர்களும் இந்த ‘ஓஏஜி ஆப்’பில் பணம் கட்டினர். இந்நிலையில் இந்த குழுவின் நிர்வாகி திடீரென. வெள்ளிதோறும் பணம் அனுப்புவோம் என்று கூறி அனுப்பியுள்ளனர். இதற்கிடையே கடந்த 3 வாரங்களாக யாருக்குமே பணம் வராததால், பாதிக்கப்பட்டவர்கள் புதுச்சேரி இணையவழி காவல் நிலையத்தில் இதுபற்றி புகார் அளித்தனர்.
இதுவரை கிடைத்த தகவல்படி 530 நபர்களுக்கு மேல் பல கோடி ரூபாய் பணத்தை செலுத்தி இருப்பது தெரிய வந்துள்ளது. இதுபற்றி புதுச்சேரி இணையவழி முதுநிலை காவல் கண்காணிப்பாளர் நித்யா கூறும்போது, “அதிக லாபம் கிடைக்கிறது என்று நினைத்து இதுபோன்று சிக்கி பணத்தை இழந்து வருகின்றனர். எனவே, இணையவழி ‘ஆப்’பில் யாரும் முதலீடு செய்து ஏமாற வேண்டாம்’’ என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT