Published : 01 Sep 2025 04:50 PM
Last Updated : 01 Sep 2025 04:50 PM

தொழிலதிபர் வீட்டில் 120 சவரன் நகை கொள்ளை: சிங்கப்பெருமாள் கோவில் பகுதியில் திருட்டு சம்பவங்கள் அதிகரிப்பு

சிங்கபெருமாள் கோவில்: டிராஸ்போர்ட் நிறுவன தொழிலதிபர் வீட்டில் 120 சவரன் நகை கொள்ளையடிக்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிங்கப்பெருமாள் கோவில் பகுதியில் தொடர் கொள்ளைச் சம்பவங்கள் அதிகரித்த வண்ணம் உள்ளன.

செங்கல்பட்டு மாவட்டம், சிங்கபெருமாள் கோவில் பாரதியார் தெருவை சேர்ந்தவர் ஜெய கோபால். இவரது மனைவி யமுனா பாய் (63). இவருக்கு சதிஷ், ரத்தீஷ் என்ற இரண்டு மகன்கள் உள்ளனர். இருவரும் கே. ஆர்.சி., என்ற டிராஸ்போர்ட் நிறுவனம் நடத்தி வருகின்றனர். இருவருக்கும் திருமணமாகி அருகில் வீடு கட்டி தங்களின் குடும்பத்துடன் வசித்து வரும் நிலையில், யமுனாபாய் பாய் மட்டும் பழைய வீட்டில் தனியாக வசித்து வந்தார்.

இந்நிலையில், தொடர் திருமண நிகழ்ச்சிகளுக்கு செல்ல வேண்டும் என்பதற்காக யமுனா பாய் தனது மகன் வீட்டில் இருந்த 120 சவரன் நகைகளை தனது வீட்டுக்கு கொண்டு வந்து பயன்படுத்தி வந்துள்ளார். கடந்த ஆகஸ்ட் 31-ம் தேதி இரவு 8:00 மணிக்கு யமுனா பாய் நகையை வீட்டில் வைத்து பூட்டி விட்டு அருகில் இருந்த சதிஷ் வீட்டுக்கு தூங்க சென்றார்.

இன்று (செப்.1) காலை 7:00 மணிக்கு வந்தபோது வீட்டின் முன்கதவின்பூட்டு உடைக்கப்பட்டு பீரோவில் இருந்த 120 சவரன் தங்க நகைகள் மற்றும் உண்டியலில் இருந்த ரூ.1 லட்சம் பணத்தை மர்ம நபர்கள் திருடிச் சென்றது தெரிய வந்தது. இந்தச் சம்பவம் குறித்து தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த மறைமலைநகர் போலீஸார் மற்றும் கைரேகை நிபுணர்கள் ஆய்வு செய்தனர்.

இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். மேலும் அங்கிருந்த சிசிடிவி கேமராவை ஆய்வு செய்தபோது நள்ளிரவு 12 மணிக்கு ஒரு நபர் வீட்டுக்குள் நுழைவது போலவும், பின்னர் 1:30 மணி அளவில் வெளியேறும் காட்சியை பதிவாகி இருந்தது. மேலும் இந்தச் சம்பவத்தில் தொடர்புடையவர்களை பிடிக்க நான்கு தனிப்படைகள் அமைக்கப்பட்டு கொள்ளையர்கள் தீவிரமாக தேடப்பட்டு வருகின்றனர்.

கொள்ளை சம்பவம் அதிகரிப்பு : சிங்கபெருமாள் கோவில் அடுத்த வி.ஐ.பி., நகர் பகுதியைச் சேர்ந்த அடகு கடை நடத்தும் மகாவீர் வீட்டின் பூட்டை உடைத்து கடந்த ஜூன் மாதம் 27 சவரன் தங்க நகைகள், 1.10 லட்சம் ரூபாய் கொள்ளையடிக்கப்பட்டது. சிங்கபெருமாள் கோவில் அடுத்த வடகால் கிராமத்தைச் சேர்ந்தவர் கன்னியப்பன் என்ற விவசாயி வீட்டில் கடந்த ஜூலை மாதம் 45 சவரன் தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்டது.

இதேபோல் செயின் பறிப்பு, இரண்டு, மூன்று சவரங்கள் நகை திருட்டு போன்ற சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது, மேலும் வங்கியில் இருந்து பணம் எடுத்து வருபவர்களை திசை திருப்பியும் கொள்ளை சம்பவங்கள் நடைபெற்று வருகிறது, போலீஸாரின் கண்காணிப்பு இல்லாததால் திருட்டு சம்பவங்கள் அதிகரித்து வருவதாக பரவலாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. சிங்கப்பெருமாள் கோவில் பகுதியில் கடந்த சில மாதங்களாகவே தொடர்ந்து வழிப்பறி, திருட்டு, கொள்ளை சம்பவங்கள் அரங்கேறி வருகிறது. தொடர் குற்றச் சம்பவங்கள் அரங்கேறி வருவதால் பொதுமக்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தியுள்ளது.

மறைமலை நகர் காவல் நிலையத்தில் குற்ற பிரிவு முறையாக செயல்படாத நிலையில் திருட்டு மற்றும் கொள்ளை சம்பவங்கள் துப்பு துலக்கப்படாத நிலையில் சம்பவங்கள் தொடர்ந்து நடைபெறும் நிலை ஏற்பட்டுள்ளது. சரியாக செயல்படாத மறைமலை நகர் காவல் நிலையம் குற்றப்பிரிவு போலீஸாரின் நடவடிக்கைகளை உயர் போலீஸார் அதிகாரிகள் கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தாம்பரம் மாநகர காவல் ஆணையரகம் திருட்டு மற்றும் கொள்ளை சம்பவங்களை தடுக்கவும் நடந்த சம்பவங்களில் துப்பு துலக்கி பறிபோன பொருட்களை மீட்கவும் தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும். அதிலும் குறிப்பாக பேருந்து நிலையங்களிலும் மக்கள் அதிகம் கூடும் இடங்களிலும் கண்காணிப்பை தீவிரப்படுத்துவதோடு இரவு நேர ரோந்து பணியையும் தீவிரப்படுத்த வேண்டும்.

மேலும், சிங்கப்பெருமாள் கோவிலை மையமாகக் கொண்டு புதிதாக காவல் நிலையம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை தொடர்ந்து பல ஆண்டுகளாக இருந்து வருகிறது. இதை அரசு கவனத்துக்கு கொள்ள வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x