Published : 01 Sep 2025 03:41 PM
Last Updated : 01 Sep 2025 03:41 PM
திருப்பூர்: பல்லடம் நகரில் 7 நாய்களுக்கு விஷம் வைத்து கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பூர் மாவட்டம் பல்லடம் நகர் 18 வார்டுகளை கொண்டது. இதில் ஐந்தாவது வார்டு பகுதியில் மர்மமான முறையில் நாய்கள் உயிரிழந்திருப்பது தெரிய வந்ததைத் தொடர்ந்து அப்பகுதி பொதுமக்கள், நகராட்சி சுகாதாரத் துறை ஊழியர்கள் மற்றும் பல்லடம் போலீஸாருக்கு தகவல் அளித்துள்ளனர். சம்பவ இடத்துக்கு வந்த அதிகாரிகள் நாய்கள் இறப்பு தொடர்பாக விசாரணை மேற்கொண்டனர்.
இது குறித்து பல்லடத்தை சேர்ந்த சமூக ஆர்வலர் ராஜா கூறும்போது, "பல்லடம் நகர் ஐந்தாவது வார்டு மற்றும் பச்சாபாளையம் ஆகிய பகுதிகளில் சனிக்கிழமை துவங்கி ஞாயிறு இரவு வரை ஏழு நாய்கள் இறந்துள்ளன. அனைத்தும் விஷம் வைத்து கொல்லப்பட்டுள்ளது. மிகவும் கொடூரமான முறையில் இந்தச் செயலை செய்த நபர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் இந்த நிலை தொடரும்போது பல்லடம் நகரில் பல்வேறு இடங்களில் ஆதரவற்று வாழும் நாய்கள் உயிருக்கு அச்சம் ஏற்பட்டுள்ளது.
இது தொடர்பாக பல்லடம் போலீஸார் உரிய முறையில் விசாரித்து, உரிய நபர்களை கண்டறிந்து கைது செய்ய வேண்டும். இல்லையென்றால், இந்த மோசமான செயல் தொற்று நோய் போல ஒவ்வொரு பகுதியிலும் பரவும் சூழல் ஏற்படும். பல்லடம் நகரில் வேறு எங்கேயும் இதுபோன்று விஷம் வைத்து நாய்களை கொன்றுள்ளார்களா என்பது தொடர்பாக விசாரிக்க வேண்டும்" என்று சமூக ஆர்வலர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT