Published : 29 Aug 2025 02:05 PM
Last Updated : 29 Aug 2025 02:05 PM

தென் மாவட்டங்களில் நான்கரை ஆண்டுகளில் 3,041 வன்கொடுமை வழக்குகள் பதிவு!

தென் தமிழகத்தில் கடந்த நான்கரை ஆண்டுகளில் 3,041 எஸ்சி, எஸ்டி வன்கொடுமை வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அதிகபட்சமாக மதுரை மாவட்டத்தில் 514 வழக்குகள் பதிவாகி உள்ளதாக தகவல் அறியும் உரிமை சட்டத்தில் வெளியாகியுள்ளது.

பட்டியல் சாதி மற்றும் பட்டியலின பழங்குடியினர் மக்கள் மீது வன்கொடுமைகள் நிகழ்த்தப்படும்போது அவர்களுக்கு சட்ட ரீதியான பாதுகாப்பை உறுதிப்படுத்தி மறுவாழ்வு கிடைக்கப்பெற வேண்டுமென்பதற்காக பட்டியல் சாதியினர் மற்றும் பட்டியல் பழங்குடியினர் வன்கொடுமைத் தடுப்புச் சட்டம் கடந்த 1995-ம் ஆண்டு உருவாக்கப்பட்டது.

இச்சட்டம் 2015-ம் ஆண்டில் கூடுதலாகப் பிரிவுகளை உள்ளடக்கி அவசரத் திருத்தச்சட்டமாக மாற்றம் செய்யப் பட்டது. இத்திருத்தச் சட்டத்தின்படி கடந்த 2020-ம் ஆண்டு முதல் 20.06.2025 வரை நான்கரை ஆண்டுகளில் தென் தமிழகத்தில் மதுரை, தேனி, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம், நெல்லை, புதுக்கோட்டை, தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரி ஆகிய 9 மாவட்டங்களில் மொத்தம் 3,041 வன்கொடுமை வழக்குகள் பதிவாகியுள்ளன.

அதிகபட்சமாக மதுரை மாவட்டத்தில் 514 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு முதல் இடத்தில் உள்ளதாக தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் (ஆர்டிஐ) தகவல் வெளியாகியுள்ளது.

செ. கார்த்திக்

இது குறித்த தகவல்களைப் பெற்ற மதுரையைச் சேர்ந்த சமூகச் செயற்பாட்டாளர் செ. கார்த்திக் கூறியதாவது: 465 வழக்குகளுடன் தேனி இரண்டாவது இடத்திலும், 440 வழக்குகளுடன் புதுக்கோட்டை மூன்றாவது இடத்திலும் உள்ளன. சிவகங்கை மாவட்டத்தில் மட்டும் மூன்றரை ஆண்டுகள் அறிக்கையின்படி 327 வன்கொடுமை வழக்குகள் பதிவாகி உள்ளன. பதிவான 3041 வழக்குகளில் 509 வழக்குகள் உண்மைக்குப் புறம்பான வழக்கு என அவை ரத்து செய்யப்பட்டுள்ளன.

அதிக வழக்குகள் உண்மைக்குப் புறம்பானது என ரத்து செய்யப்பட்டதில் புதுக்கோட்டை மாவட்டம் 124 வழக்குகளுடன் முதலிடத்திலும், 97 வழக்குகளுடன் தேனி இரண்டாவது இடத்திலும், 74 வழக்குகளுடன் சிவகங்கை (மூன்றரை ஆண்டுகள் தகவல்களின்படி) மூன்றாவது இடத்திலும் உள்ளன.

கடந்த 2024 மார்ச் மாத இறுதி நிலவரப்படி தமிழ்நாடு ஏடிஜிபி சமூக மற்றும் மனித உரிமைகள் பிரிவு ஆர்.டி.ஐ. அறிக்கையின்படி தமிழகத்தில் தீண்டாமை வன்கொடுமைகள் அதிகம் நடைபெறும் மாவட்டங்களில் மதுரை மாவட்டத்தில் 45 கிராமங்கள் அடையாளப்படுத்தப்பட்டு மாநிலத்திலேயே முதல் இடத்தில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ஆனால், மதுரை மாவட்டத்தில் உள்ள அரசு அதிகாரிகள், சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவினர் பொதுமக்களிடையே சாதிய மனோபாவத்தைப் போக்கி சமூக நல்லிணக்கத்தை உருவாக்க வேண்டிய விழிப்புணர்வு கூட்டங்கள் அதிக அளவில் நடத்தப்படவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இதுபோன்ற சாதிய மனோபாவத்தைக் களைவதற்கு அந்தந்த மாவட்டங்களில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் ஆதிதிராவிடர் நலத்துறை, ஏடிஜிபி தலைமையிலான சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு, சமூக நலத்துறை ஆகிய மூன்று துறைகளும் இணைந்து அதிக அளவிலான சமூக கலந்துரையாடல் விழிப்புணர்வுக் கூட்டங்களை நடத்துவது மட்டுமல்லாமல் சமூக நல்லிணக்கக் கிராமங்களை உருவாக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x