Published : 28 Aug 2025 08:33 PM
Last Updated : 28 Aug 2025 08:33 PM
சென்னை: ஆள் மாறாட்டம் செய்து தேர்வு எழுதி, தமிழகத்தில் மத்திய அரசு பணியில் வட மாநிலத்தவர்களைச் சேர வைத்த ரயில் நிலைய அதிகாரி, இந்தி ஆசிரியர் உட்பட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தேசிய தொழில்நுட்ப ஆசிரியர் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் சென்னை தரமணியில் இயங்கி வருகிறது. மத்திய கல்வி அமைச்சகத்தின் கீழ் செயல்படும் இந்நிறுவனத்தில் தொழில்நுட்ப ஆசிரியர்களுக்கு பல்வேறு திறன் மேம்பாட்டு பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன.
இந்நிறுவனத்தில் பல்நோக்கு பணியாளர் பதவியில் 35 காலியிடங்களை நிரப்ப 17.9.2023 அன்று ஆன்லைன் தேர்வு நடத்தப்பட்டு ஊழியர்கள் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்பட்டனர். அவர்களில் சிலர் போதிய தகுதி இல்லாமல் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து தேர்வானவர்கள் ஆள் மாறாட்டம் மூலம் பணியில் சேர்ந்தார்களா என்ற சந்தேகம் எழுந்தது.
இதுதொடர்பாக சென்னை காவல் ஆணையர் அருணிடம் கடந்த ஜூன் 25-ம் தேதி புகார் அளிக்கப்பட்டது. இதையடுத்து, சென்னை மத்திய குற்றப்பிரிவு கூடுதல் காவல் ஆணையர் ராதிகா, துணை ஆணையர் கீதாஞ்சலி, உதவி ஆணையர் காயத்ரி மேற்பார்வையில் ஆய்வாளர்கள் சுமதி, கோகுலகிருஷ்ணன், கமல்மோகன் ஆகியோர் கொண்ட தனிப்படைகள் அமைக்கப்பட்டன.
போலீஸ் விசாரணையில் ஆள் மாறாட்டம் மூலம் தேர்வு எழுதி மோசடியாகப் பணியில் சேர்ந்தது வட மாநிலத்தைச் சேர்ந்த காஜல், சகுன் குமார், டிங்கு, பிரேம் சிங், அங்கித்குமார், ஜித்து யாதவ் என்பது தெரிந்தது. இந்த 6 பேரையும் போலீஸார் கடந்த ஜூலை 4-ம் தேதி கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர்.
பின்னர், அவர்களை தனித்தனியாக காவலில் எடுத்து விசாரித்தபோது, கைதான சகுன் குமாருக்காக தேர்வு எழுதியது வாராணசி ரயில் நிலையத்தில் இளநிலை பொறியாளராகப் பணி செய்துவந்த பிஹாரைச் சேர்ந்த ஜெய்சங்கர் பிரசாத் (34), டிங்குக்காக தேர்வு எழுதி கொடுத்தது டெல்லி அருகே உள்ள ரயில் நிலையத்தில் டிக்கெட் சூப்பர்வைசராகப் பணியாற்றி வந்த உத்தர பிரதேசத்தைச் சேர்ந்த அரவிந்த் குமார் (30), ஜித்து யாதவுக்காக ஆள் மாறாட்டம் மூலம் தேர்வு எழுதியது உத்தரப் பிரதேசம், மாடன்பூர் கிராமத்தில் உள்ள ஆரம்பப் பள்ளியில் இந்தி ஆசிரியராகப் பணியாற்றி வரும் தர்மேந்தர் குமார்(32) என்பது தெரிய வந்தது.
இதையடுத்து, அம்மாநிலம் சென்ற போலீஸார், சம்பந்தப்பட்ட 3 பேரையும் கைது செய்து சென்னை அழைத்து வந்தனர். இவர்கள் ரூ.3 லட்சம் முதல் ரூ.6 லட்சம் வரை பணம் பெற்றுக்கொண்டு ஆள் மாறாட்டம் மூலம் தேர்வு எழுதி கொடுத்தது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த விவகாரம் தொடர்பாக தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT