Published : 26 Aug 2025 06:08 AM
Last Updated : 26 Aug 2025 06:08 AM
திருவாரூர்: திருவாரூரில் சிறைக் காவலர் உட்பட 3 பேரை தாக்கியதாக திமுக கவுன்சிலர் உள்ளிட்ட 11 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. திருவாரூர் நகராட்சிக்கு உட்பட்ட 30-வது வார்டு கட்டபொம்மன்தெருவைச் சேர்ந்தவர் கிஷோர்(26). இவரது வீட்டின் முன்பு, அதே பகுதியில் உள்ள முத்துமாரியம்மன் கோயில் திருப்பணி தொடர்பான பிளக்ஸ் பேனரை 30-வது வார்டு திமுக கவுன்சிலர் புருஷோத்தமன் மற்றும் அவரது ஆதரவாளர்கள் நேற்று முன்தினம் வைத்தனர்.
இதுகுறித்து கவுன்சிலர் புருஷோத்தமனிடம் கிஷோர் மற்றும் அவரது நண்பர்களான விக்னேஷ், சிறைக் காவலர் இளங்கோவன் ஆகியோர் கேட்டபோது, இருதரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு, பின்னர் கைகலப்பானது. இதில், கிஷோர், விக்னேஷ் காயமடைந்து, திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
தொடர்ந்து, கிஷோர் அளித்த புகாரின்பேரில், கவுன்சிலர் புருஷோத்தமன், அவரது மகன் பிரவீன் மற்றும் அப்பகுதியைச் சேர்ந்த ராகுல், நிர்மல்ராஜ், பூபதி ராஜா, ஐயப்பன், சவுந்தரபாண்டியன், முனுசாமி, ஹரிஷ், இளங்கோ, அபிமணி ஆகிய 11 பேர் மீது திருவாரூர் தாலுகா போலீஸார் வழக்குப்பதிந்து, விசாரித்து வருகின்றனர்.
அதேபோல, கவுன்சிலர் புருஷோத்தமன் அளித்த புகாரின்பேரில், கிஷோர் மற்றும் அவரது நண்பர்களான விக்னேஷ், சிறைக் காவலர் இளங்கோவன் ஆகிய 3 பேர் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இதற்கிடையே, திமுக கவுன்சிலர் புருஷோத்தமன் தனது ஆதரவாளர்களுடன் கிஷோர் உள்ளிட்டோரை தாக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT