Published : 25 Aug 2025 01:51 PM
Last Updated : 25 Aug 2025 01:51 PM

ஶ்ரீவில்லிபுத்தூர் அருகே நாட்டு துப்பாக்கி மூலம் மான் வேட்டையாட முயன்ற காவலர் கைது

ஶ்ரீவில்லிபுத்தூர்: ஶ்ரீவில்லிபுத்தூர் - மேகமலை புலிகள் காப்பகத்தில் நாட்டு துப்பாக்கி வைத்து மான் வேட்டையாட முயன்ற காவலரை கைது செய்த வனத்துறையினர், தப்பியோடிய இருவரை தேடி வருகின்றனர்.

மேகமலை புலிகள் காப்பகம் ஶ்ரீவில்லிபுத்தூர் வனச்சரகம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வனச்சரகர் செல்லமணி தலைமையிலான வனத்துறையினர், நேற்று இரவு வழக்கமான ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது நள்ளிரவில் ரெங்கர் கோயில் பீட் கொலைகாரன் பாறை அருகே துப்பாக்கி சுடும் சத்தம் கேட்டுள்ளது. சத்தம் கேட்ட இடத்திற்கு வனத்துறை சென்ற போது, அங்கிருந்தவர்கள் தப்பி ஓட முயன்றுள்ளனர். அதில், இருவர் தப்பி ஓடிய நிலையில் துப்பாக்கி உடன் இருந்த ஒருவரை வனத்துறையினர் மடக்கி பிடித்து, வனச்சரக அலுவலகம் அழைத்து வந்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில் கைதானவர் மம்சாபுரத்தை சேர்ந்த தனுஷ்கோடி(40) என்பதும், அவர் ஶ்ரீவில்லிபுத்தூர் தாலுகா காவல் நிலையத்தில் காவலராக பணிபுரிந்து வருவதும் தெரியவந்தது. உடனடியாக நாட்டு துப்பாக்கியை பறிமுதல் செய்த வனத்துறையினர், காவலர் தனுஷ் கோடியை நீதிமன்றத் தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும் தப்பி ஓடிய மம்சாபுரத்தை சேர்ந்த ராமராஜ், ஶ்ரீவில்லிபுத்தூர் பெருமாள்பட்டியை சேர்ந்த தங்கராஜ் ஆகிய இருவரை வனத்துறையினர் தேடி வருகின்றனர்.

இதுகுறித்து வனத்துறையினர் கூறுகையில்: கைது செய்யப்பட்ட தனுஷ்கோடி, நக்சல் ஒழிப்பு பிரிவில் காவலராக பணிபுரிந்த போது, வனப் பகுதியை குறித்து நன்கு அறிந்து வைத்திருந்ததால், தனது நண்பர்களுடன் சேர்ந்து மான் வேட்டைக்கு வந்துள்ளார். மேலும், தப்பியோடிய தனுஷ் கோடியின் நண்பர்களை தேடி வருகிறோம்” என்று வனத்துறையினர் தெரிவித்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x