Published : 24 Aug 2025 12:39 AM
Last Updated : 24 Aug 2025 12:39 AM
திருச்சி: சென்னை விருகம்பாக்கத்தைச் சேர்ந்தவர் பசுபதி. கட்டிட ஒப்பந்ததாரர். இவருக்கும், அதே பகுதியைச் சேர்ந்த ரவி, வளர்மதி ஆகியோருக்கும் முன்விரோதம் இருந்துள்ளது.
2016-ல் இருதரப்பினருக்கும் ஏற்பட்ட தகராறு தொடர்பாக, பசுபதி, அவரது மனைவி கலாவதி, மகன்கள் தென்னரசு, தமிழ்ச்செல்வன், ரமேஷ், விவேகானந்தன் ஆகியோர் மீது அப்போது விருகம்பாக்கம் காவல் ஆய்வாளராக இருந்த ஜெயராஜ் வழக்குப் பதிவு செய்தார்.
முன்ஜாமீன் தளர்வு... தொடர்ந்து, பசுபதி மற்றும் அவரது குடும்பத்தினர் சென்னை உயர் நீதிமன்றத்தை அணுகி, நிபந்தனை முன்ஜாமீன் பெற்றனர். அதன்பின், திருச்சியில் குடும்பத்துடன் தங்கியிருந்து கன்டோன்ட்மென்ட் காவல் நிலையத்தில் கையெழுத்திட்டு வந்தனர். பின்னர், சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்து, கன்டோன்மென்ட் காவல் நிலையத்தில் கையெழுத்திட, திருச்சியில் தங்கியிருக்க தேவையில்லை என்ற தளர்வு பெற்றனர்.
இந்த உத்தரவு நகலை அளிப்பதற்காக பசுபதி, தனது குடும்பத்தினருடன் கன்டோன்மென்ட் காவல் நிலையத்துக்கு வந்துள்ளார். அப்போது அங்கிருந்த விருகம்பாக்கம் காவல் ஆய்வாளர் ஜெயராஜ், அவரது ஜீப் ஓட்டுநர் கண்ணன், வடபழனி காவல் உதவி ஆய்வாளர் விஜயபாண்டியன் ஆகியோர் சேர்ந்து பசுபதி மற்றும் அவரது குடும்பத்தினரை சரமாரியாக தாக்கியுள்ளனர்.
சிபிசிஐடி விசாரணை: இது தொடர்பாக பசுபதி தரப்பினர் திருச்சி ஜே.எம்-2 நீதிமன்றத்தில் புகார் அளித்தனர். இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்துமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்படி கன்டோன்மென்ட் போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். ஆனால், குற்றத்தின் தன்மைக்கு ஏற்ப வழக்குப் பதிவு செய்யப்படவில்லை என்பதால், சிபிசிஐடி விசாரிக்க உத்தரவிடக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் பசுபதி மனுத்தாக்கல் செய்தார். அதன்பின், உயர் நீதிமன்ற உத்தரவின்பேரில் சிபிசிஐடி போலீஸார் விசாரணை நடத்தி, நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்தனர்.
வழக்கை விசாரித்த நீதிபதி சுப்பிரமணியன், குற்றம் சாட்டப்பட்ட காவல் ஆய்வாளர் ஜெயராஜ், உதவி ஆய்வாளர் விஜயபாண்டியன், ஜீப் ஓட்டுநர் கண்ணன் ஆகியோரின் ‘குற்றமுறு செயல்’ நிரூபிக்கப்பட்டுள்ளதால், 3 பேருக்கும் தலா ஒரு மாதம் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT