Published : 22 Aug 2025 07:40 PM
Last Updated : 22 Aug 2025 07:40 PM
சென்னை: போதைப் பொருள் கடத்தலை தடுப்பதில் தமிழகம் முன்னணி மாநிலமாக திகழ்வதாக டிஜிபி சங்கர் ஜிவால் பெருமிதம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பு: தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் போதையில்லா தமிழகத்தை உருவாக்கிட தீவிரமாகப் பாடுபடுகிறார். வேறு மாநிலங்களிலிருந்து போதைப் பொருட்கள் தமிழகத்துக்கு கடத்தப்படுவதை தடுக்க காவல்துறை கடுமையான நடவடிக்கை எடுத்து வருகிறது. போதைப் பொருள் கடத்தலில் ஈடுபடுவர்கள் கைது செய்யப்படுகின்றனர்.
போதைப் பொருள் நுகர்வு இந்தியாவிலேயே தமிழகத்தில் மிகக் குறைவாக இருந்தாலும், பறிமுதல் செய்யப்படும் போதைப் பொருள்களின் அளவு மிக அதிகமாக உள்ளது. மேலும், கடத்தப்படுகின்ற போதைப் பொருள்கள் இடைமறிக்கப்பட்டு, பறிமுதல் செய்யப்பட்டு, அழிக்கப்படுகின்றன. 2022 முதல் போதைப் பொருள் தொடர்பான வழக்குகளில் ஈடுபட்டவர்களின் சொத்துகள் மற்றும் வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன.
மத்திய அரசின் ஆய்வின்படி, தமிழகத்தில் கஞ்சா பயன்பாடு வெறும் 0.1 சதவீதம், ஓபியாய்ட்ஸ் 0.26 சதவீதம், மயக்க மருந்துகள் 0.3 சதவீதம், இன்ஹேலன்ட்ஸ் 0.2 சதவீதம் மட்டுமே. இவை அனைத்தும் தேசிய சராசரியை விட மிகக் குறைவு. இதனால், போதைப் பொருள்களைக் குறைவாக நுகரும் மாநிலங்களில் தமிழகம் இடம் பெற்றுள்ளது. மேலும், தமிழகத்தில் கஞ்சா பயிரிடுவது முற்றிலும் இல்லை.
2021 முதல் மார்ச் 2025 வரை, தமிழகத்தில் போதைப் பொருள் தடுப்புச் சட்டத்தின் கீழ் இந்தியா முழுவதிலும் இருந்து 3,307 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில், ஒடிசாவைச் சேர்ந்த 892 பேர், கேரளாவைச் சேர்ந்த 662 பேர், ஆந்திராவைச் சேர்ந்த 447 பேர், பிஹாரைச் சேர்ந்த 386 பேர், மேற்கு வங்கத்தைச் சேர்ந்த 322 பேர் ஆகியோர் அடங்குவர். இது போதைப் பொருள் ஒழிப்பு போரில் தமிழகம் ஒரு முன்னணி மாநிலமாக இருப்பதை காட்டுகிறது.
கஞ்சாவின் இருப்புக் குறைந்ததால், கடத்தல்காரர்கள் இப்போது மருத்துவ மாத்திரைகள் போன்ற போதைப் பொருள்களின் பக்கம் திரும்பியுள்ளனர். 2023-ல் 39,910 போதை மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டன. 2024-ல் இந்த எண்ணிக்கை ஒரு லட்சத்தைத் தாண்டியது. "போதைப் பொருள் இல்லாத தமிழ்நாடு" என்ற திட்டத்தின் கீழ், போதைப் பொருட்களை ஒழிக்க தமிழக அரசு பலமுனை அணுகுமுறையை மேற்கொண்டுள்ளது என்று டிஜிபி சங்கர் ஜிவால் தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT