Published : 21 Aug 2025 07:00 AM
Last Updated : 21 Aug 2025 07:00 AM
சென்னை: போலியாக கையெழுத்திட்டு அமெரிக்கவாழ் இந்தியர்களின் வங்கி கணக்குகளிலிருந்து ரூ.8 கோடிக்கு மேல் மோசடியில் ஈடுபட்டதாக வங்கி அதிகாரி, ஊழியர்கள் என 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். திண்டுக்கல்லைச் சேர்ந்தவர் அர்ஜுன் பாண்டியன். இவர் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் மனு ஒன்றை அளித்திருந்தார்.
அதில், “எனது உறவினர் தீனதயாளன் தினகர் பாண்டியன் அவரது மனைவி சித்ராவுடன் அமெரிக்காவில் பணியாற்றிஅங்கேயே வசித்து வருகிறார்.அவர்கள் சென்னை அண்ணா நகரில் உள்ள வங்கிக்கிளை ஒன்றில் வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கான 3 வங்கிக் கணக்குகளைத் தொடங்கி பராமரித்து வருகின்றனர்.
அவர்களுடைய இந்த வங்கிக்கணக்குகளிலிருந்து 2015 முதல் 2020 வரையிலான காலக்கட்டத்தில் அவர்களின் அனுமதியில்லாமல் காசோலை மற்றும் வவுச்சர்களில் வங்கி அலுவலர்கள் போலியாக கையொப்பமிட்டு வங்கிக் கணக்கிலிருந்து ரூ.1 கோடியே 43 லட்சத்து 25 ஆயிரத்தை எடுத்து மோசடி செய்துள்ளனர். இந்த மோசடியில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுத்து பணத்தை மீட்டுத் தர வேண்டும்” என தெரிவித்திருந்தார்.
இதுகுறித்து சென்னை மத்திய குற்றப்பிரிவு கூடுதல் காவல் ஆணையர் ராதிகா மேற்பார்வையில் வங்கி மோசடி புலனாய்வுப் பிரிவு போலீஸார் விசாரணை நடத்தினர். இதில் அமெரிக்காவில் வசிக்கும் தீனதயாளன், சித்ரா தம்பதியின் வங்கிக் காசோலையில் போலியாக கையொப்பமிட்டு, வங்கி அலுவர்களால் பணப்பரிமாற்றம் செய்யப்பட்டு பண மோசடி செய்யப்பட்டது கண்டறியப்பட்டது.
இந்த மோசடி தொடர்பாக சம்பந்தப்பட்ட வங்கியின் துணை மேலாளர் அமைந்தகரையைச் சேர்ந்த வேணுகோபால் (50), காசாளர்கள் கொரட்டூரைச் சேர்ந்தகுலோத்துங்கன் (49), தனசேகரன் (41) ஆகிய 3 பேரும் கைது செய்யப்பட்டனர். விசாரணையில் இவர்கள் இதே பாணியில் பல வெளிநாட்டு வாழ் இந்தியர்களின் பணம் ரூ.8 கோடிக்கு மேல் ஏமாற்றியது தெரியவந்துள்ளதாக போலீஸார் கூறினர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT