Published : 13 Aug 2025 02:38 PM
Last Updated : 13 Aug 2025 02:38 PM

கடலூர் முதுநகரில் காவலாளி அடித்துக் கொலை - 12 மணி நேரத்தில் கொலையாளி கைது

கொலையான சூர்யா, கைதான பாலசுப்பிரமணியன்

கடலூர் முதுநகர் அருகே உள்ள சங்கொலிக்குப்பத்தை சேர்ந்தவர் வேல்முருகன். இவரது மகன் மகன் சூர்யா (26). இவர் அதே பகுதியில் செயல் படாத பீர் தொழிற்சாலை ஒன்றில் இரவு காவலாளியாக வேலை பார்த்து வந்தார்.

நேற்று முன்தினம் இரவு, வழக்கம் போல் சூர்யா பணிக்குச் சென்றார். நள்ளிரவில் சூர்யா முகம் சிதைந்து ரத்த காயங்களுடன் இறந்து கிடந்தார். அந்த வழியாக சென்ற சிலர் இதைப் பார்த்து, கடலூர் முதுநகர் காவல் நிலையத்துக்கு தகவல் அளித்தனர். சம்பவ இடத்துக்கு சென்ற போலீஸார் விசாரணை நடத்தினர்.

முகத்தில் கல்லால் கடுமையாக தாக்கியதால் முகம் சிதைந்து உயிரிழந்திருப்பது தெரியவந்தது. போலீஸார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அப்பகுதியில் இருந்த சிசிடிவி. கேமரா காட்சிகளை சோதனை செய்து வந்தனர்.

இந்த நிலையில் முதுநகர் இன்ஸ்பெக்டர் கதிரவன், உதவி- ஆய்வாளர் ஆனந்தகுமார் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. இதற்கிடையே, கடலூர் முதுநகர் அருகே உள்ள குடிகாடு பேருந்து நிறுத்தம் நின்ற இளைஞர் ஒருவர் போலீஸாரை கண்டவுடன் தப்பி ஓட முயன்றார். சந்தேகத்தின் பேரில் பிடித்து பிடித்து விசாரணை நடத்தினர்.

சூர்யாவை கொலை செய்ததை அந்த இளைஞர் ஒத்துக் கொண்டார். இது தொடர்பாக போலீஸ் தரப்பில் கூறுகையில், “சங்ககொலிக்குப்பம், நடுத் தெருவை சேர்ந்த சங்கர் மகன் பாலசுப்பிரமணியன் (26) என்பவர் நேற்று முன்தினம் தேதி இரவு பீர் தொழிற்சாலையில் சூர்யா மற்றும் அதே பகுதியைச் சேர்ந்த சரத்குமார், முனியப்பன் ஆகியோருடன் சேர்ந்து மது அருந்தியுள்ளார்.

அப்போது சூர்யா அவர்களை அசிங்கமாக பேசியதால் கோபமுற்ற சரத்குமார், முனியப்பன் இருவரும் வீட்டுக்கு சென்று விட்டனர். பால சுப்பிரமணியன் மட்டும் சூர்யாவிடம் பேசி கொண்டிருந்ததாகவும், சூர்யாவுக்கு போதை அதிகமானதால் பாலசுப்பிரமணியனை அசிங்கமாக பேசியுள்ளார்.

கோபமடைந்த பாலசுப்பிரமணியன் சூர்யாவை தாக்கியுள்ளார். இதில் அவர் கீழே விழுந்துள்ளார். அப்போது பாலசுப்பிரமணியன் கீழே கிடந்த கல்லை எடுத்து சூர்யாவின் முகம் மற்றும் தலையில் தாக்கி கொலை செய்துள்ளார்” என்று தெரிவித்தனர்.

பாலசுப்பிரமணியனை கைது செய்த போலீஸார், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கடலூர் மத்திய சிறையில் அடைத்தனர். குற்றவாளியை 12 மணி நேரத்தில் கைது செய்த கடலூர் முதுநகர் போலீஸாருக்கு கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ்.ஜெயக்குமார் பாராட்டு தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x